திருச்சியில் நடைபெற்ற ‘விடியலுக்கான முழக்கம்’ பொதுக்கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களுக்கு 7 முக்கிய உறுதிமொழிகளை அளித்தார். அதன்படி, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமைக்கு முற்றுப்பள்ளி வைக்கப்படும் என உறுதியளித்தார்.
தி.மு.க தலைவரின் இந்த உறுதிமொழி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் தி.மு.க-வின் உறுதிமொழி குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான், “மலக்குழியில் மனிதர்களை பயன்படுத்தும் பணியில், இந்தியாவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுதான் வெற்றிநடை போடும் தமிழகத்தின் இன்றைய நிலைமை.
தமிழகம் முழுவதும் 7 லட்சம் பேர் மலக்குழி சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் 250 பேர் இப்பணிகளின்போது விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மிகச்சரியாக அணுகி இந்த விஷயத்தை ஏழு முக்கிய உறுதிமொழிகளில் ஒன்றாக வைத்துள்ளார். தி.மு.க ஆட்சியில் இந்தக் கொடுமைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.
ரயில்வே துறையில் கையால் மலம் அள்ளும் ஒரு கேவலமான நிலைமை இந்த அரசு துறையில் இருக்கிறது. சாதி முறை தான் இதற்குக் காரணம். மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகள் எனவும், தனியார் விடுதிகளிலும் கணக்கில் வராத பலர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கழிவுகளை அள்ளும் இயந்திரங்கள் சில நகராட்சி மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டு இருக்கின்றன. ஆனாலும் அவை பயன்படுத்தப்படவில்லை. அதுதான் இன்றைய அரசின் லட்சணமாக இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.