பிரிட்டனின் பிரதமராவதற்கு முன்பு பத்திரிகையாளராக இருந்தபோது பெற்ற ஊதியத்தை விட இப்போது குறைவான சம்பளமாக இருப்பதாக போரிஸ் ஜான்சன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அவர் தனது பிரதமர் பதவியை அடுத்த ஆண்டு மே மாதம் ராஜினாமா செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இதுதொடர்பாக இங்கிலாந்தின் எம்.பிக்கள் இருவர் அந்நாட்டு ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், பிரிட்டன் நாட்டின் பிரதமராக உள்ள போரிஸ் ஜான்சனுக்கு மாத ஊதியமாக 1,50,402 பவுண்டுகள் ( ரூ.1 கோடியே 44 லட்சத்து 84 ஆயிரத்து 654) வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பளம் போரிஸ் ஜான்சன் பத்திரிகையாளராக பணியாற்றியபோது கிடைத்ததை விடவும் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது பத்திரிகையில் தலையங்கம் எழுதும் பணியில் இருந்தபோது போரிஸுக்கு 23 ஆயிரம் பவுண்ட் (ரூ.22.15 லட்சம்) மாதச் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது.
Tory கட்சியின் தலைவராவதற்கு முன், எம்.பியாக இருந்தபோது ஆண்டுக்கு 2.75 லட்சம் பவுண்ட் (2.64 கோடியே 84 லட்சம் ரூபாய்) போரிஸ் பெற்று வந்தார். இதுபோக, மாதம் இரண்டு மேடை பேச்சுகளுக்கென 1.60 ஆயிரம் பவுண்ட் (ரூ.1.54 கோடி) பெற்று வந்தார்.
இவற்றையெல்லாம் ஒப்பிடுகையில் நாட்டின் பிரதமர் பதவிக்கு பெற்று வரும் ஊதியம் மிகவும் குறைவாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அவரது ராஜினாமா முடிவுக்கு முக்கிய காரணமாக இருப்பது அவரது குடும்பம் எனவும் கூறுகிறார்கள்.
ஏனெனில், போரிஸ் ஜான்சனுக்கு இருக்கும் 6 குழந்தைகளில் இருவர் பதின்ம வயதை எட்டியிருப்பதால் அவர்களின் எதிர்கால செலவுகளை மேற்கொள்ளவும், விவாகரத்து சட்டத்தின் படி அவருடைய முன்னாள் மனைவி மரீனா வீலருக்கும் மாதந்தோறும் செலவிட வேண்டும் என்பதால் போரிஸுக்கு 1.50 லட்சத்து 402 பவுண்டுகள் போதவில்லை என கூறப்படுகிறது.
ஒருவேளை போரிஸ் ஜான்சன் பதவி விலகினால் பிரிட்டனின் பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கின் பெயர் பரிசீலனையில் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரிஷி சுனக் தற்போது எம்.பியாக உள்ளார்.