கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் தனது தீவிரத்தன்மையைக் காட்டிவருகிறது. அந்தவகையில் கொரோனாவால் பிரிட்டனில் இதுவரை 578 பேர் உயிரிழந்துள்ளனர். 11,816 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக கடந்த மார்ச் 11ம் தேதி, பிரிட்டன் சுகாதாரத்துறை துணை அமைச்சரும், கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.,யுமான நடீன் டோரீஸிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை நடீன் டோரீஸே உறுதிப்படுத்தியுள்ளார்.
அதனையடுத்து பிரிட்டன் இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இருவருமே பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்தாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அலுவலரின் ஆலோசனைக்கு ஏற்ப பிரதமருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்று பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தெரிவித்தாது.
இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள போரிஸ் ஜான்சன், “கடந்த 24 மணி நேரமாக கொரோனா தொடர்பான லேசான அறிகுறிகள் தென்பட்டன. இந்நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனால் என்னை நானே தனிமைப்படுத்திக்கொள்வேன். நாம் இந்த வைரஸை எதிர்த்துப் போராடவேண்டும். மேலும் காணொளி காட்சி சந்திப்பின் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தலைமை ஏற்பேன்” என தெரிவித்துள்ளார். உலக நாடு ஒன்றின் பிரதமர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.