கொரோனா வைரஸ் பாதிப்பு உலகளவில் 2.71 கோடியை எட்டியுள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் 8.88 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் கொரோனா பாதிப்பு சற்றும் குறையாமல் தீவிரமடைந்து வருகிறது.
கொரோனா தொற்றைத் தடுக்கும் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வராத நிலையில், பல நாடுகள் ஊரடங்கு விதிகளை தளர்த்தி வருகின்றன. எனினும், சுகாதார நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியது அவசியம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த தொற்றுநோய்க்கு உலகம் இன்னும் கூடுதல் கவனத்துடன் தயாராக வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கூறுகையில், “பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுபட வேண்டும். கொரோனா தான் கடைசி தொற்றுநோய் எனக் கூற முடியாது.
வரலாறு நமக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது. அதனால் அடுத்த தொற்றுநோய் வரும்போது, சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்தி உலகம் தயாராக இருக்கவேண்டும். அடுத்த தொற்றுநோய்க்கு முன்கூட்டியே தயாராக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.