கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ள சூழலில், விரைவாக அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தளர்த்துவது பேரழிவுக்கு வழிகாட்டுவதாக அமைந்துவிடும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் இரண்டரைக் கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கிட்டத்தட்ட 8.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
கொரோனா ஊரடங்கால் உலக நாடுகள் கடும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதால், கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன. இந்தியாவில் கொரோனா தொற்று சற்றும் குறையாத சூழலில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானம் ஊடகத்தினரிடையே பேசுகையில், “பல நாடுகள் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் விரைவாகத் தளர்த்தி மக்களை இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. அதேபோல, கொரோனா வைரஸ் பரவலையும் கட்டுப்படுத்துவது அவசியம்.
ஒருபுறம் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மக்களை இயல்பு வாழ்க்கை வாழ அனுமதித்துவிட்டு, மறுபுறம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துகிறோம் என்று கூறினால், இரண்டுக்கும் சமநிலையை உண்டாக்க முடியாது.
கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மக்களைச் சுதந்திரமாகச் செல்ல அனுமதிப்பது, கொரோனா மூலம் ஏற்படும் பேரழிவுக்கு வழிகாட்டுவதற்கு ஒப்பானதாகும்.
4 முக்கிய அம்சங்களை முக்கியமாகப் பின்பற்ற வேண்டும்.
1. மக்கள் மொத்தமாகக் கூடும் நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
2. கொரோனாவால் எளிதாகப் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரை, வயதினரைப் பாதுகாக்க வேண்டும்.
3. மக்கள் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே பாதுகாக்கும் வழிமுறைகளை அறியச் செய்ய வேண்டும்.
4. கொரோனா நோயாளிகளைக் கண்டறிவது, தனிமைப்படுத்துவது, பரிசோதனை செய்வது, கவனிப்பது போன்றவற்றைச் செய்யவேண்டும். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.
உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் பல்வேறு நாடுகளில் நடத்திய ஆய்வில் 90 சதவீத நாடுகள், கொரோனா வைரஸ் காரணமாக மற்ற சுகாதார சேவைகளை நிறுத்திவிட்டன. குறிப்பாக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல், ஊட்டச்சத்து மருந்துகள் அளித்தல் உள்ளிட்டவற்றை ஒத்திவைத்துள்ளன.
25 சதவீதத்துக்கும் மேலான நாடுகள், கொரோனாவால் அவசரப் பணிகளுக்காகன பிற மருத்துவ சேவைகளை நிறுத்தி வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளன.
ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா வைரஸ் என்னவிதமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதைப் புரிந்துகொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.