‘ஃபேர் அண்ட் லவ்லி’ என்ற பெயரில் முகப் பொலிவு கிரீம்களை விற்பனை செய்துவந்த ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், ‘ஃபேர்’ என்ற வார்த்தையை தனது தயாரிப்பு பொருளிலிருந்து நீக்கப்போவதாக அறிவித்துள்ளது.
பல்லாண்டு காலமாக மனிதர்களிடையே பாகுபாட்டை ஊக்குவித்து வரும் நிறவெறி, சமீபத்தில் ஒரு உயிரைக் காவு கொண்டது. கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்டு அமெரிக்க போலிஸாரால் கொல்லப்பட்டது மக்களைக் கொந்தளிக்கச் செய்தது. இதைத்தொடர்ந்து நிறவெறிக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன.
முகப் பொலிவு கிரீமான ‘ஃபேர் அண்ட் லவ்லி’ எனும் பெயரும் அதன் விளம்பரங்களும் கறுப்பு நிற சருமத்தின் மீதான தவறான நம்பிக்கையை ஊக்குவிக்கும் விதமாக உள்ளதாக தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலகளாவிய நிறுவனமான யூனிலீவரின் இந்திய பிரிவான இந்துஸ்தான் யூனிலீவர், 'ஃபேர் அண்ட் லவ்லி'க்கு பெயர் மாற்றுவதாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தரப்பில், தங்களது பொருளின் பெயரில் உள்ள 'ஃபேர்' என்ற வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்தப்போவதாகவும், புதிய பெயர் ஒழுங்குமுறை ஒப்புதலுக்காக் காத்திருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, யூனிலீவரின் அழகு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பிரிவு தலைவர் சன்னி ஜெயின் கூறும்போது, "வெள்ளையான" மற்றும் "ஒளிரும்" போன்ற சொற்களின் பயன்பாடு அழகுக்கான ஒரு தனித்துவமான பொருளை பரிந்துரைக்கிறது என்பதாக நாங்கள் உணர்ந்தாலும், விமர்சனங்களையடுத்து அதை நிவர்த்தி செய்ய விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.