ஐ.பி.எல். தொடரில் சன்ரைஸர் ஐதராபாத் அணிக்காக விளையாடியபோது தான் நிறவெறி பாகுபாட்டுக்கு ஆளானதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரத்தில் நகரத்தில் கடந்த மே 25ம் தேதி கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்டு என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த காவல்துறை, அவரை கடுமையாகத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால், அமெரிக்காவில் இனவெறி தாக்குதலை கண்டித்து அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு துறைகளில் உள்ள கருப்பினத்தவர்களும் தாங்கள் சந்தித்த மோசமான அனுபவங்களை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கருப்பினத்தவர்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி ஐ.பி.எல் தொடரில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில், தான் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடும்போது என்னை சக வீரர்கள் ‘கலு’ (kaluu) என்று அழைப்பார்கள். அப்படி என்றால் வலுவான கருப்பு மனிதன் என்றுதான் நினைத்தேன். ஆனால் இப்போது அதன் அர்த்தத்தை தெரிந்து கொண்டேன்.
என்னையும், திசரா பெரேராவையும் அந்த வார்த்தை சொல்லி வீரர்கள் அழைக்கும்போது ஒருவகையான சிரிப்பு அவர்களது முகத்தில் தெரியும். அதனை இழிவானது என இப்போது நான் உணர்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இஷாந்த் சர்மாவின் பழைய இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றைத் தேடிப் பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர் நெட்டிசன்கள்.
2014-ல் இஷாந்த் சர்மா பகிர்ந்துள்ள அந்தப் பதிவில், “நான், புவி, கலூ, மற்றும் கன் சன்ரைசர்ஸ்” என்று இஷாந்த் சர்மா குறிப்பிட்டுள்ள புகைப்படத்தில் இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், டேல் ஸ்டெய்ன், டேரன் சமி ஆகியோர் உள்ளனர்.
இந்த விவகாரம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் இச்செயலுக்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.