சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 170 நாடுகளில் தனது பாதிப்பை கொண்டு சேர்த்துள்ளது. சீனாவைத் தொடர்ந்து இத்தாலி, ஈரான், தென்கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகள் கொரோனாவால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
கொரோனால் உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,071 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அமெரிக்கா கொரோனாவால் அதிக பாதிப்பைச் சந்தித்து வருகிறது. மருத்துவத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் தடுப்பு மருத்து கண்டிபிடிப்பதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதித்தவரின் நுரையீரல் பாதிப்பை வாஷிங்டன் டி.சி மருத்துவமனை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர். 3D பரிமாணத்தில் உள்ள அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
மேலும் அந்த வீடியோவில் கொரோனா வைரஸால் நுரையீரலுக்கு ஏற்படும் பாதிப்பை ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவமனையின் தொராசி அறுவை சிகிச்சை தலைவர் கீத் மோர்ட்மேன் விளக்குகிறார். 59 வயதான ஒரு ஆணின் நுரையீரல் பாதிக்கப்பட்ட பின்னர் எப்படி இயங்குகிறது என்பது அதில் தெளிவாகக் காட்டப்படுகிறது.
மேலும், நுரையீரலில் மஞ்சள் நிறத்தில் இருக்கும் பகுதிகள் பாதிக்கப்பட்ட பகுதியாகவும் வீக்கமடைந்துள்ளதாகவும் அந்த வீடியோவில் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அதன் வீரியம் மற்ற பகுதிகளுக்கும் பரவி நோயாளி மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்தத் தொற்று இளம் நோயாளிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கின்றார்.
அதுமட்டுமல்லாது, கொரோனா பாதிக்கப்பட்ட நபருக்கு நுரையீரல் பாதிப்பு சரியாக நீண்ட நாட்கள் ஆகும் எனவும் மக்கள் அலட்சியமாக நடந்துகொள்ளாமல் கொரோனாவின் தீவிரத்தன்மையை உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காவே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது” என மோர்ட்மேன் கூறுகிறார்.