அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில், இரானின் மிக சக்திவாய்ந்த இராணுவத் தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி, வெள்ளிக்கிழமையன்று உயிரிழந்தார்.
இதனையடுத்து ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமெய்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 170 பயணிகளுடன் 6:12 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 8:12) உக்ரைன் தலைநகர் கிய்வ் நோக்கி போயிங் 737 - 800 ரக உக்ரைன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.
போயிங் விமானம் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே, அதாவது விமான நிலையத்திலிருந்து 60 கி.மீ தொலைவிலேயே பரந்த் மற்றும் ஷஹ்ரியர் ஆகிய பகுதிகளுக்கு இடையில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் பயணித்தவர்களில் ஒருவர் கூட உயிர்பிழைக்கவில்லை.
உயிரிழந்தவர்களில் 82 பேர் ஈரான் நாட்டவர்கள், 63 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள், ஒன்பது விமான ஊழியர்கள் உள்பட 11 பேர் உக்ரைன் நாட்டவர்கள் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். 10 சுவீடன் நாட்டவர்கள், 4 ஆப்கானியர்கள், 3 பிரிட்டானியர்கள் மற்றும் 3 ஜெர்மானியர்களும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இது விபத்தாக இருக்கலாம் என்று கருதப்பட்டபோது, அமெரிக்காவின் செய்தி ஊடகம் தங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதாக கூறப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரான், அமெரிக்காவின் போர் விமானம் என நினைத்து தவறுதலாக தாக்குதல் நடத்தியிருக்கலாம் என செய்திகள் வெளியிட்டன.
மேலும், நிலத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தாக்குதலால் விமானம் விபத்துக்குள்ளானதாகவும், இதுதொடர்பான தகவல் தமக்கு கிடைத்துள்ளதாகவும் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதோடு அதுதொடர்பான வீடியோ காட்சிகளையும் வெளியிட்டார்.
அமெரிக்கா மற்றும் கனடா அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்புத் தெரிவித்துள்ளது. மேலும், ஈரான் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், போயிங் விமானம் முதலில் விமான நிலையத்தை விட்டு வெளியேற மேற்கு நோக்கி பறந்து பின் பிரச்னை என்றவுடன் அது வலது பக்கம் திரும்பி விமான நிலையத்தை நோக்கி வந்துள்ளது.
பறந்து கொண்டிருக்கும்போதே தீ பற்றியிருந்ததை சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், விமானம் கடுமையாக சிதைந்துள்ளதால் பூமியில் விழுந்தபோது வேகமாக மோதி வெடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், விமானத்தை திரும்பும் முன்னர் அலி காமேனி விமான நிலையத்துக்கு அபாய உதவிகள் கோரி விமானி எந்த அழைப்பையும் விடுக்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விமானத்தின் ‘கருப்புப் பெட்டி’யை அமெரிக்கா அல்லது விமானத்தை தயாரித்த போயிங் நிறுவனத்துக்கு தர முடியாது என்று ஈரான் அரசு கூறியுள்ளது. மேலும் விமானம் விழுந்து நொறுங்கியது தொடர்பான விசாரணையில் போயிங் பங்கேற்கலாம் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தையும் ஈரானின் நடவடிக்கைகளையும் ஏற்க மறுக்கும் அமெரிக்காவின் ஆதரவு நாடுகள் ஈரான் மீது தொடர்ந்து குற்றம் சாட்டிவருகின்றன. போர்ப் பதற்றம் உருவாகும் சூழலில் ஒரு விபத்தைப் பற்றி முழுமையான தகவல் கிடைக்காமல் உலக நாட்டுத் தலைவர்கள் ஒரு நாட்டை குற்றம் சாட்டிப் பேசுவது மேலும் பிரச்னை ஏற்படத்தான் வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.