அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கிடையேயான மோதல் போக்கு உலக நாடுகள் அனைத்திற்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த மோதல் தற்போது ஆயுதப் பயன்பாட்டால் இன்னும் அதிகரித்துள்ளது.
இதனிடையே, இரு நாட்டு முக்கியத் தலைவர்களும் அதிகாரிகளும் கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தில் வார்த்தைப் போர் நடத்தி வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில், ஈரானின் ராணுவ தளபதி காஸிம் சுலைமானி மற்றும் 6 பேர் கொல்லப்பட்டனர். அடுத்த நாளே, ஈரானில் நடந்த அவரது இறுதிச் சடங்கு அணிவகுப்பில் மீண்டும் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த பிரச்னையை முடித்துக்கொள்ள விரும்பாத அமெரிக்கா தற்போது மீண்டும் ஈரான் நாட்டை எச்சரிக்கும் வகையில் பல மிரட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானில் 52 இடங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் என்று ட்விட்டரில் எச்சரித்துள்ளார்.
ட்ரம்ப்பின் இத்த எச்சரிக்கைக்கு சளைக்காமல், ஈரானும் அமெரிக்காவை முன்நின்று எதிர்த்து வருகிறது. இதனிடையே ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என தெரிவித்த ட்ரம்ப்க்கு இரு நாட்டு அரசுகளும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
மேலும் ஈரான் நாட்டு அமைச்சர் ஆஸாரி ஜோஹ்ரோமி ட்விட்டரில் ட்ரம்ப்புக்கு பதிலடி கொடுத்ள்ளார். அதில், சர்வாதிகாரி ஹிட்லர், மங்கோலிய அரசர் செங்கிஸ் கான் ஆகியோர் கலாசாரங்களை வெறுத்தனர்.
அதேபோல் தான் ட்ரம்ப் இருக்கிறார். அதிகார உடையில் இருக்கும் தீவிரவாதிதான் ட்ரம்ப். ஈரானிய தேசத்தையும் அதன் கலாசாரத்தையும் யாராலும் அழிக்கமுடியாது என்பதை வரலாறு அவருக்கு உணர்த்தும்” எனத் தெரிவித்திருந்தார்.
மீண்டும் கருத்துப் பதிவிட்டிருந்த ட்ரம்ப், “அமெரிக்காதான் அதன் இராணுவத்திற்குகாக 2 ட்ரில்லியன் டாலர் செலவிடுகிறது. உலகிலேயே மிகப்பெரிய சிறந்த இராணுவப்படை எங்களிடம் உள்ளது. எனவே ஈரான் மோதி, ஒரு அமெரிக்கர் இறந்தால் கூட எந்தத் தயக்கமுமின்றி புத்தம் புதிய அதிநவீன இராணுவ கருவிகளை ஏவுவோம்” என மிரட்டல் விடுத்துள்ளார்.
மோதலுக்கு யார் காரணம் என்கிற விஷயத்திற்குள் போவது ஒருபுறமிருக்க, நடைபெறவிருக்கும் போரை நிறுத்துவதற்கு இரு நாடுகளும் தயாராக இல்லை என்பதும், குறிப்பாக இதில் அமெரிக்கா சற்றும் தயக்கம் காட்டவில்லை என்பதும் இந்த வார்த்தைப் போரின் மூலம் தெளிவாகியுள்ளது என உலக நாடுகளின் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.