ஆஸ்திரேலியாவின் சிட்னி, விக்டோரியா உள்ளிட்ட மாகாணங்களைச் சுற்றி காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் அதிகபடியான வெப்பக் காற்று ஆஸ்திரேலிய மக்களை பாதித்து வருகிறது. இந்நிலையில் சிட்னி பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நகரம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் தெற்கு வேல்ஸ் பகுதியில் வசிக்கும் 70 லட்சம் மக்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுவரையில் ஆஸ்திரேலிய காட்டுத்தீக்கு 23 பேர் பலியாகி உள்ளனர்.
15,000-க்கும் மேற்பட்டவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மேலும் ஏராளமானோர் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் மாகாண ஆணையர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சூழலில் வனவிலங்குகள் பெரிதும் பாதிக்கப்பட்டிப்பதாக வனவிலங்கு ஆர்வலர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர். காடுகளில் தீ பற்றியது தெரிந்ததுமே பறவைகள் மட்டுமே தப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த காட்டுத்தீயில் சிக்கிய உயிரினங்கள் தீயில் கருகிய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. அதில் பல விலங்குகள் பலத்த தீக்காயத்துடன் இருப்பது தெரியவந்துள்ளது.
இதில் உயிர் பிழைத்த விலங்குகள் நீண்ட காலத்திற்கு உயிர்வாழுமா என்ற கேள்வி எழுகிறது. இந்த காட்டுத்தீயினால் இதுவரை லட்சக்கனக்கான விலங்கினங்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விமானங்கள், ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை பாய்ச்சி தீயை அணைக்குப் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த காட்டுத்தீயினால், ஆஸ்திரேலியா நாட்டின் பல மாகானத்தில் கடும் புகைமூட்டம் உருவாகியுள்ளது.