ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர்ப் பகுதியைச் சுற்றி கடந்த ஒருவாரகாலமாக காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் அதிகப்படியான வெப்பக் காற்று ஆஸ்திரேலியாவை பாதித்து வருகிறது. இந்நிலையில் சிட்னி பகுதியில் எமர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டுள்ளது.
நகரம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என அரசு சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பல முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தெற்கு வேல்ஸ் பகுதியில் வசிக்கும் 70 லட்சம் மக்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரையில் ஆஸ்திரேலிய காட்டுத்தீக்கு 9 பேர் பலியாகி உள்ளனர். 600-க்கும் மேற்பட்டவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மேலும் ஏராளமானோர் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் மாகாண ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் விடுமுறைக்காக குடும்பத்துடன் வெளிநாட்டுப் பயணம் சென்றார். அவரது வெளிநாட்டுப் பயணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்கள் பலரும் பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கு எதிராக கருத்துத் தெரிவித்து வந்தனர்.
மக்கள் அவதுயுறும் இந்த நிலையில், மக்களை மீட்க நடவடிக்கை எடுக்காமல் சுற்றுலா சென்றது பொறுப்பில்லாத நடவடிக்கை என எதிர்க்கட்சியினரும் கடுமையாகச் சாடினர். மக்களின் எதிர்ப்பை அறிந்ததால், தனது விடுமுறையை பாதியிலேயே கைவிட்டு நாடு திரும்பியுள்ளார் அந்நாட்டுப் பிரதமர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மாரிசன், ”மக்கள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளபோது நான் குடும்பத்துடன் சுற்றுலா சென்றது அவர்களை கோபப்படுத்தியுள்ளது. அதனை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது. அதற்காக மன்னிப்பு கோருகிறேன்” எனத் தெரிவித்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், அந்நாட்டின் பிரதமர் மக்களிடம் மன்னிப்புக் கேட்டதை உலக நாடுகளில் உள்ள முக்கிய ஊடகங்கள் செய்தியாக்கின.
இந்த செய்தி இந்திய மக்களிடயேயும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் நடவடிக்கை மக்களுக்கு கோபம் ஏற்படுத்தியுள்ளது என்று தெரிந்து ஆஸ்திரேலிய பிரமர் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் நமது பிரதமரோ மக்கள் துளியும் விரும்பாத சட்டத்தைக் கொண்டுவந்து, அதனால் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் உயிரிழந்தும் சிறு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என பலரும் தங்களின் ஆதங்கத்தைத் தெரிவித்து வருகின்றனர்.