பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டம் நாட்டு மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் எழுந்த எதிர்ப்பு இன்று நாடுமுழுவதும் எதிரொலிக்கிறது. பல இடங்களில் நடைபெற்றுவரும் எழுச்சிமிக்க போராட்டத்தை பெரும் வன்முறையாக அரசு மாற்றியுள்ளது.
இரண்டாவது வாரமாக தொடரும் போராட்டத்தைத் தணிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசு, நியாயமான முறையில் போராபவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவருகிறது. குறிப்பாக ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அமைதியாக போராடிக்கொண்டிருந்த போதும், வன்முறை எதுவும் நிகழாத போதும் மோடிதான் முதலில் வன்முறை நடப்பதாக தெரிவித்தார்.
அதன்பின்னரே போராட்டம் நடைபெற்ற இடங்களில் போலிஸார் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். பல இடங்களில் தடியடி, துப்பாக்கிச் சூடு என பெரும் கலவலத்தை ஏற்படுத்தினர்கள். அதன்விளைவாக தற்போதுவரை 22க்கும் மேலானோர் வன்முறையில் பலியாகியுள்ளனர்.
இந்தச் சூழலில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் ஈடுபடுவோரை நகர்ப்புற நக்சல்கள் என்று குற்றம்சாட்டினார்.
மேலும், அரசாங்கம் மாணவர்களின் உணர்வைப் புரிந்துகொண்டு, பேச்சைக் கேட்கத் தயாராக உள்ளதாகவும், ஆனால் அழுக்கு அரசியல் மற்றும் வன்முறையில் ஈடுபடும் காங்கிரஸ் மற்றும் நகர்ப்புற நக்சல்கள் இளைஞர்களின் தோள்பட்டையின் மீது ஏறி துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாக்குகிறார்கள் எனவும் பேசினார்.
மேலும் பேசிய அவர், “எங்கள் திட்டங்களை செயல்படுத்தும்போது எந்த மதத்தவரையும் நீங்கள் கோயிலுக்கு செல்பவரா, மசூதிக்கு செல்பவரா எனக் கேட்டதில்லை. என்னுடைய செயல்பாட்டில் பாகுபாட்டை கண்டறிந்து காட்டுமாறு எதிர்கட்சிகளுக்கு சவால் விடுகிறேன்” எனத் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, இந்த திட்டம் காந்தியின் திட்டம் எனப் பேசத் தொடங்கிய அவர், “குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பது அகதிகளின் வலி மீது அமிலம் வீசுவதற்கு ஒப்பாகும், இந்த சட்டம் மோடியின் திட்டமல்ல, இது காந்தியின் எண்ணங்களால் ஈர்க்கப்பட்டதால் உருவான திட்டங்களில் ஒன்று. தங்கள் பெயருடன் காந்தியை கொண்டுள்ளவர்கள் குறைந்தபட்சம் காந்தியை பின்பற்ற வேண்டும்” என காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களைச் சாடியுள்ளார்.
மேலும், சில மாநிலங்களின் முதல்வர்கள் தங்களது மாநிலங்களில் குடியுரிமை கொண்டுவரமாட்டோம் என்கிறார்கள். அது சாத்தியமாகுமா என உங்களது சட்ட நிபுணர்களிடம் கேளுங்கள் என மிரட்டும் நொக்கில் பேசியுள்ளார்.
பிரதமர் மோடி நாட்டு மக்கள் பற்றிக் கவலைப் படாமல் தங்கள் சட்டம் தூய்மையானது அதனை எதிர்க்கட்சிகள் தான் திட்டமிட்டு எதிர்க்கிறார்கள் என்பது போல பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து வாய்திறக்காத மோடி போலிஸாரின் மீதான தாக்குதலை மட்டும் குறிப்பிட்டு பேசுகிறார் என குற்றம் சாட்டிவருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரசும், ‘நகர்ப்புற நக்சல்களுமே’ குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை தூண்டிவிடுகிறார்கள் என்று அவதூறு மழை பொழிந்த மோடியின் பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டர் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில், சாதியும் மதமும் தங்கள் திட்டங்களுக்கான அளவுகோல் இல்லை என்று பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. திட்டங்களை அமல்படுத்துவது சாதியும் மதமும் பார்த்தல்ல என்பதை அறிந்திருக்கும் பிரதமர் அதை செயல்பாட்டின் மூலம் நிரூபிக்க வேண்டும்.
அரசமைப்பு சாசனம் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிராகவும், மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தவும் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நகர்வுகளை புரிந்துகொண்டுதான் போராட்டங்கள் அலைபோல் எழுந்து கொண்டிருக்கின்றன.
இந்திய குடியுரிமையை தீர்மானிக்கும்போது ஒரு மதம் எவ்வாறு தகுதியற்றதாகும் என்கிற மக்களின் கேள்விக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும். தவறான அணுகுமுறை, வகுப்புவாத நகர்வு குறித்து மக்கள் கேள்வி எழுப்புகையில் அதற்கான பதிலை அளிக்காமல் உணர்வைத்தூண்டி எதிர்கொள்ளலாம் என்பது விரும்பத்தக்கதல்ல” எனத் தெரிவித்துள்ளார்.