நாடுமுழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் துவங்கியுள்ளது. இந்த பண்டிக்கையொட்டி அமெரிக்கா போன்ற பல நாடுகளில் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பரிசளித்து வாழ்த்துகள் தெரிவித்து கொண்டாடுவது வழக்கமான நிகழ்வாக பார்க்கப்பட்டுகிறது.
அமெரிக்காவின் வட கரோலினாவின் வில்மிங்டண் பகுதியைச் சேர்ந்தவர் கேத்தி ஓமா. இவர் கிறிஸ்துமஸ் பொருள்களை டெலிவரி செய்யவரும் நபர்களுக்கு பரிசு அளிக்க முடிவு செய்தார்.
அதற்காக, தனது வீட்டின் வாசலில் ஒரு இருக்கை முழுவதும் தின்பண்டங்கள் மற்றும் சிற்றுண்டிகளை வைத்துள்ளார். மேலும் அந்த இடத்தில், “உங்களது இனிமையான நாளுக்கு தேவையான உணவுகளை இங்கு எடுத்துக் கொள்ளுங்கள். எனது விடுமுறை ஷாப்பிங்கை எளிதாக்கியதற்கு நன்றி” என ஒரு அட்டையில் எழுதி வைத்துவிட்டு, டெலிவரி செய்ய வரும் நபர்களின் மகிழ்ச்சியான தருணங்களை காண்பதற்கு சி.சி.டி.வி ஒன்றை வீட்டின் முன்பகுதியில் பொருத்தி வைத்திருந்தார் ஓமா.
இதனையடுத்து, கடந்த வாரம் கேத்தி ஓமா, வீட்டிற்கு அமேசான் டெலிவரி செய்யும் நபர் ஒருவர் வந்துள்ளார். அங்கு வாசலில் வைக்கப்பட்ட இருக்கையில் இருந்த தின்பண்டங்கள் மற்றும் சிற்றுண்டிகளை பார்த்து உற்சாகம் அடைந்து, ’இது நன்றாக இருக்கிறது’ என கூச்சலிட்டு சந்தோசத்தில் துள்ளிக் குதித்தார். மேலும், தனக்கு தேவையான தின்பண்டங்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நடமானமாடிக் கொண்டே மீண்டும் தன் வேலைக்கு திரும்பினார்.
இந்த சம்பவத்தின் போது பதிவான வீடியோவை கேத்தி ஓமா சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த முயற்சிக்கு பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.