ஏப்.19 ஆம் தேதி 102 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் முடிந்ததை அடுத்து ஏப்.26 ஆம் தேதி கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்னும் நான்கு நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்து - முஸ்லிம் மக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்கும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு கடும் கண்டனங்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே "மோடியின் அடையாளம் வெறுப்பு பேச்சு, கவனத்தை திசை திருப்புவது, பதவிக்காக பொய் பேசுவது, தவறான தகவல் கொடுப்பது, எதிரணியினர் மீது பொய் வழக்குகள் போடுவது. இனி இந்த பொய்க்கு நாட்டின் 140 கோடி மக்கள் பலியாக மாட்டார்கள். இந்திய வரலாற்றில் மோடி போல் எந்த பிரதமரும் தனது பதவியின் கண்ணியத்தை குறைத்ததில்லை." என தெரிவித்துள்ளார்.
அதேபோல் நடிகர் பிரகாஷ் ராஜ், "இந்த கீழ்த்தரமான பேச்சையும் வரலாறு பதிவு செய்யும். அரசருக்கு அறிவுரை சொல்லி எந்தப் பயனும் இல்லை. அதிகாரத்துக்கு அவர் அலைவது வெளிப்படையாக தெரிகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு அவரை அச்சுறுத்தி விட்டது. இன்னும் கொஞ்ச நாட்களில் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்" என சமூகவலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சமூக ஆர்வலர் அஜய்போஸ் என்பவர்"ராஜஸ்தான் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?. மோடியின் தேர்தல் விதிமீறல் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?" என RTI மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்படி பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில் x சமூகவலைதளத்தில் #ModiDisasterForIndia என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மோடியின் வெறுப்பு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.