ஏப்.19 ஆம் தேதி 102 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் முடிந்ததை அடுத்து ஏப்.26 ஆம் தேதி கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்னும் நான்கு நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்து - முஸ்லிம் மக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்கும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படும். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதிப்பீர்கள்அதை எல்லாம் குழந்தைகள் அதிகம் வைத்துள்ளவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். இதுதேவைதானா?
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் இதையே சொல்கிறது முன்பு மன்மோகன் சிங் ஆட்சி இருந்தபோதும் இதையே சொன்னார்கள்இதுதான் நகர்ப்புற பயங்கரவாதம்இவர்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலி இருக்காது" இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். இதையடுத்து பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்களும் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "இந்த கீழ்த்தரமான பேச்சையும் வரலாறு பதிவு செய்யும். அரசருக்கு அறிவுரை சொல்லி எந்தப் பயனும் இல்லை. அதிகாரத்துக்கு அவர் அலைவது வெளிப்படையாக தெரிகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு அவரை அச்சுறுத்தி விட்டது. இன்னும் கொஞ்ச நாட்களில் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்" என தெரிவித்துள்ளார்.