உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இங்கு கடந்த 12-ந் தேதி சில்க்யாரா- தண்டல்கான் இடையே இந்த சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்ற போது சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதில், சுரங்கத்துக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், 41 பேரையும் மீட்க தொடர்ந்து பேரிடர் மீட்பு படையினர் தீவிர முயற்சி எடுத்து வந்தனர். சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் சிலநாட்கள் கழித்தே 41 பேர் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகின. உணவு பொருட்கள் அனுப்பப்படும் பாதை வழியே வாக்கி டாக்கி அனுப்பப்பட்ட நிலையில், அதன் மூலம் மீட்புப் படையினர் அவர்களுடன் பேசி வந்தனர். தொடர்ந்து தங்கள் கடும் முயற்சிகளில் மீட்பு படையினர் ஈடுபட்ட போதிலும், தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் தாமதமாகிக் கொண்டே வந்தது.
இருப்பினும் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து வந்தது. இதில் 14 நாட்களுக்கு மேலாக மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில், சுரங்கப் பாதையில் துளையிடப் பயன்படுத்திய ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் உடைந்து, பழுதடைந்தது. இதனால் இனி அந்த இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் மாற்று ஏற்பாடாக, கைகளால் துளையிடும் (manual drilling) இயந்திரத்தைப் பயன்படுத்தி துளையிடப்பட்டது. ஆனால், இடிபாடுகளில் அதிக அளவு மணல் விழுந்த காரணத்தால் அந்த பணியிலும் தொய்வு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேலிருந்து கீழாகத் துளையிடும் பணி தொடங்கியது. மலைக்கு மேலே இருந்து செங்குத்தாக 86 மீட்டருக்கு குழாயைச் செலுத்தி தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்றது. முதல் நாளில், 19 மீட்டர் ஆழத்துக்குத் துளையிடப்பட்ட நிலையில், பிறகு 86 மீட்டர்களில் 31 மீட்டர் தோண்டும் பணி முடிவடைந்தது.
இதையடுத்து நேற்று சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் பத்திரமாக ஒவ்வொருவராக மீட்டு வெளியே கொண்டு வரப்பட்டன. இவர்களைப் பார்த்து அவர்களது உறவினர்கள் மட்டுமல்லாது இந்திய நாடே நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.
இந்நிலையில், தொழிலாளர்கள் மீட்க பெரு உதவியாக இருந்த சர்வதேச சுரங்க நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் யார் என பலரும் இணையங்களில் தேடி வருகின்றனர். இவரின் ஆலோசனைகளாலே தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த அர்னால்ட் டிக்ஸ்?
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் அர்னால்ட் டிக்ஸ். பேராசிரியரான இவர் சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். உலகின் முன்னணி நிலத்தடி சுரங்கப்பாதை நிபுணராக அர்னால்ட் டிக்ஸ் அறியப்படுகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த துறையில் பணியாற்றி பல்வேறு அனுபவங்களைப் பெற்றவர்.
சுரங்கத்தில் தொழிலாளர்கள் சிக்கிய எட்டு நாட்கள் கழித்து அர்னால்ட் டிக்ஸ் அழைத்து வரப்பட்டார். அப்போதே நிலைமைகளை உற்றுக் கவனித்து தொழிலாளர்கள் மீட்பதில் பல சிரமங்கள் இருக்கும். ஆனால் மீட்கப்படுவார்கள் என கூறி இருந்தார். இதன் படியே பல சவால்களை கடந்து நேற்று 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.