உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இங்கு கடந்த 12-ந் தேதி சில்க்யாரா- தண்டல்கான் இடையே இந்த சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்ற போது சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதில், சுரங்கத்துக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், 41 பேரையும் மீட்க தொடர்ந்து பேரிடர் மீட்பு படையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இந்த சுரங்கப்பாதையில் 6 அங்குல குழாய் அமைத்து தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள், குடிநீர், ஆக்சிஜன் உள்ளிட்டவை அனுப்பப்பட்டது. மேலும் அவர்களுக்கு லூடோ, ரம்மி உள்ளிட்டவை விளையாடுவதற்காக பொருட்களும் அனுப்பப்பட்டன. இதன் மூலம் அவர்கள் மன நிலையை சற்று நேராக வைத்திருக்க முடியும்.
சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் சில நக்கல் கழித்தே 41 பேர் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகின. உணவு பொருட்கள் அனுப்பப்படும் பாதை வழியே வாக்கி டாக்கி அனுப்பப்பட்ட நிலையில், அதன் மூலம் மீட்பு படையினர் அவர்களுடன் பேசி வந்தனர். தொடர்ந்து தங்கள் கடும் முயற்சிகளில் மீட்பு படையினர் ஈடுபட்ட போதிலும், தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் தாமதமாகி கொண்டே வந்தது.
இருப்பினும் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து வந்தது. இதில் 14 நாட்களுக்கு மேலாக மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில், சுரங்க பாதையில் துளையிடப் பயன்படுத்திய ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் உடைந்து, பழுதடைந்தது. இதனால் இனி அந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் மாற்றுஏற்பாடாக, கைகளால் துளையிடும் (manual drilling) இயந்திரத்தைப் பயன்படுத்தி துளையிடுடப்பட்டது. ஆனால், இடிபாடுகளில் அதிக அளவு மணல் விழுந்த காரணத்தால் அந்த பணியிலும் தொய்வு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேலிருந்து கீழாக துளையிடும் பணி தொடங்கியது. மலைக்கு மேலே இருந்து செங்குத்தாக 86 மீட்டருக்கு குழாயைச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்றது. முதல் நாளில், 19 மீட்டா் ஆழத்துக்கு துளையிடப்பட்ட நிலையில், பிறகு 86 மீட்டர்களில் 31 மீட்டர் தோண்டும் பணி முடிவடைந்தது.
தொடர்ந்து தீவிர முயற்சிகளில் ஈடுபட்ட வந்த நிலையில், இன்று தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டு விடுவர் என்று கூறப்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ், உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் இருந்தது. எனினும் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், இன்னும் சில மணி நேரம் ஆகும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் ஒவ்வொருவராக பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இதில் முதற்கட்டமாக 5 தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில், தற்போது 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தேசிய மீட்புக்குழு தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக வெளியேறினர்.
அவர்கள் அனைவரையும், அவர்களது குடும்பத்தினர் ஆரத்தழுவி புன்னகையுடன் வரவேற்றனர். மேலும் அவர்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.
அனைத்து தொழிலாளர்களும் தற்போது நலமாக உள்ளதாக மீட்புக்குழு தெரிவித்துள்ளது. சுரங்கத்தில் இருந்து ஒருவரை மீட்பதில் 2 - 3 நிமிடம் வரை ஆனதால் நேரம் எடுத்துகொண்டாதாக மீட்புக்குழு தெரிவித்துள்ளது. மீட்புக்குழுவுக்கும் மக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.