கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வாகனம் ஓட்டுவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர், முதியவரை தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் கார் பேனட் மீது வாலிபரை வைத்து, பெண் ஒருவர் வேகமாக காரை ஓட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் ஞான பாரதி நகர் பகுதியில் நேற்று மதியம் தர்ஷன் (29) என்ற இளைஞர் காரில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த பிரியாங்க என்ற பெண் மற்றொரு காரில் வேகமாக வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் தர்ஷன் காரில் சிறிதாக மோதியுள்ளார் பிரியங்கா. இதனால் ஆத்திரமடைந்த தர்ஷன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரை இடிக்க முயறுள்ளார் பிரியங்கா. இதனால் தர்ஷன் கார் பேனர் மீது ஏற முயற்சித்தபோது, காரை அதிவேகமாக இயக்கியுள்ளார்.
இதனால், பயத்தில் கார் பேனட்டை இறுக்கமாக பிடித்தப்படி தர்ஷன் தொங்கியுள்ளார். ஆனாலும் காரை நிறுத்தாமல் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவுக்கு வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார் பிரியங்கா. அப்போது பிரியங்காவின் கணவர் பிரமோத் உடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து இதுதொடர்பாக வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது தர்ஷன் மீது பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றது, தாக்க முயற்சி, தகாத வார்த்தையில் திட்டியது உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழும், பிரியங்கா மற்றும் அவரது கணவர் மீது விபத்தை ஏற்படுத்தும் நோக்கில் வாகனத்தை இயக்கியது, கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.