70 வயது முதியவரை 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் அரங்கேறியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் லாகூர் பகுதியைச் சேர்ந்தவர் லியாகத். தற்போது 70 வயதாகும் இந்த முதியவர், தனது உடலை திடமாக வைத்துக்கொள்வதற்காக தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். அப்படி செல்லும்போது இவர் தனக்கு பிடித்த பாடல்களை பாடிக்கொண்டே போவார்.
அதேபோல், அதே பகுதியை சேர்ந்தவர் ஷுமைலா. 19 வயதுடைய இளம்பெண்ணான இவரும் வாக்கிங் செல்வது வழக்கம். அப்படி செல்லும்போது ஒரு முறை இந்த முதியவரை சந்தித்துள்ளார். அப்போது அவருக்கு முதியவர் பாட்டு பிடித்துபோயுள்ளது. மேலும் முதியவருக்கு ஷுமைலாவை பிடித்து போயுள்ளது.
எனவே ஷுமைலாவை கவர, தினமும் பாட்டு பாடிக்கொண்டே வாக்கிங் செய்து வந்துள்ளார். அதோடு, ஷுமைலாவின் பின்னால் பாட்டு பாடிக்கொண்டே சென்றுள்ளார். இதனால் ஷுமைலாவுக்கும் முதியவரை பிடித்துப்போக இருவரும் பேசத்தொடங்கியுள்ளனர். இப்படி நாட்கள் செல்ல திடீரென ஒரு நாள் முதியவர் தனது காதல் விருப்பத்தை ஷுமைலாவிடம் தெரிவித்துள்ளார்.
அவர் முதலில் சற்று யோசிக்க, பிறகு அவரும் இவரது காதலை ஏற்றுக்கொண்டுள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து தனது வீட்டில் ஷுமைலா கூறுகையில், அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இருப்பினும் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஷுமைலா - தனது காதலரான 70 வயது முதியவர் லியாகத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த திருமணம் குறித்து முதியவர் கூறுகையில், "70 வயது என்பது உடல் அளவில்தான்; மனதளவில் நான் இன்னும் மிகவும் இளமையாக தான் இருக்கிறேன். காதல் என்று வந்துவிட்டால் வயது என்பது ஒரு பொருட்டல்ல. தற்போது எனது மனைவி மிகவும் அருமையாக சமைக்கிறார். இதனால் நான் ஹோட்டலில் சாப்பிடுவதையே தவிர்த்து விட்டேன்" என்கிறார்.
காதலுக்கு கண்கள் இல்லை என்று பலரும் பலவிதமான பழமொழிகள் கூறினாலும், வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த காதல் ஜோடிகள் இருந்துள்ளனர். இவர்களுக்கு உலகளவில் இருந்து பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.