தருமபுரி மாவட்டம் அரூர் அருகே சாலையில் அடிபட்டு கிடந்த சிட்டுக்குருவியை மீட்டு சாலையோரம் இருந்த புற்களின் மீது படிந்திருந்த பனித்துளிகள் மூலம் உயிர் கொடுத்த இளம் பெண்ணின் மனித நேயம்.வைரல் ஆகும் வீடியோ
தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் ஹேமாஸ்ரீ தம்பதியினர் தங்களது உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதேச்சையாக பெத்தூர் அருகே சாலையில் சிட்டுக்குருவி ஒன்று அடிபட்டு துடிதுடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது.
இதனைக்கண்ட ஹேமாஸ்ரீ தான் சென்ற இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி அடிப்பட்டு கிடந்த சிட்டுக்குருவியை கையில் எடுத்து பார்த்துள்ளார். அப்பொழுது சிட்டுக்குருவி உயிருக்கு போராடிய நிலையில் துடிதுடித்து இருந்துள்ளது.
ஆனால், அதற்கு தண்ணீர் கொடுப்பதற்கு தங்களிடத்தில் தண்ணீர் இல்லாததால் செய்வதறியாது திகைத்து நின்ற ஹேமாஸ்ரீ சமயோஜிதமாக உடனே சாலையோரமிருந்த புற்களின் மீது பனித்துளிகள் தேங்கி நிற்பதை கண்ட அவர் அதனை எடுத்து சிட்டுக்குருவிக்கு ஊற்றியுள்ளார்.
அப்பொழுது மயக்க நிலையில் சிட்டுக்குருவி சிறிது நேரத்திற்கு பிறகு சுயநினைவுக்கு வந்து, மெல்ல கண் விழித்து நடக்க தொடங்கியுள்ளது. மீண்டும் ஹேமா ஸ்ரீ பனித்துளிகளை கொண்டு சிட்டுக்குருவிக்கு தண்ணீர் ஊட்டினார். சிறிது நேரம் கழித்து சிட்டுக்குருவி உயிர்ப்புடன் பறந்து சென்றது.
இதனை கண்ட ஹேமா ஸ்ரீ அவரது கணவர் பன்னீர்செல்வம் இருவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். சாலையில் அடிபட்டு கிடந்த சிட்டுக்குருவிக்கு பனித்துளிகளின் மூலம் உயிர்ப்பு கொடுத்த நிகழ்ச்சியை அந்த வழியாக சென்ற ஒருவர் அதனை வீடிவாக எடுத்து சமூக வளைத்தளங்கில் வைரலாக பரவியது. ஹேமாஸ்ரீயின் மனிதநேய இந்த செயல் காண்பவர்களை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.