கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள ஹுல்லேமனே குண்டூரில் என்ற கிராமத்ததில் யானை மிதித்து பெண்மணி ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினரை சந்திப்பதற்காக மூடி வரை தொகுதி எம்.எல்.ஏ குமாரசாமி கிராமத்திற்கு வருகை தந்தார்.
அப்போது கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி, எம்.எல்.ஏ-விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வனவிலங்குகள் தொடர்ந்து கிராமத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை கூறியும் அலட்சியமாக இருந்ததாக குற்றச்சாட்டு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் எம்.எல்.ஏ மீது தாக்குதல் நடத்தினர். இதில் எம்.எல்.ஏ.வின் சட்டை கிழிந்தவுடன் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலிஸார் உடனடியாக லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தினர்.
மேலும் எம்.எல்.ஏ மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற எம்.எல்.ஏ மீது தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த தாக்குதலின் போது உடன் சென்ற ஆதரவாளர்கள் தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.