பாஜக இந்திய அரசியலில் அறிமுகமான பிறகு முக்கியமான இருவகை போக்குகள் அறிமுகமாகின. பொய்த் தகவல், சமூக தள பயன்பாடு!
இரண்டையுமே அக்கட்சி ஆட்சிக்கு செல்லும் வழிகளாகக் கொண்டிருக்கிறது.
சமூக தளங்களில் பரப்பப்படும் பிரசாரங்களும், அவற்றை இயக்குவதற்கென பிரத்யேக நபர்களை சம்பளம் கொடுத்து பணிக்கு அமர்த்தியதும் இந்தியாவிலேயே முதன்முறையாக பா.ஜ.கதான். அதுவரை சமூகதளம் வெறும் பொழுதுபோக்கு, கருத்து பரிமாற்றம் என்கிற ஆரோக்கிய போக்கைக் கொண்டிருந்தது. பா.ஜ.க அதை கைக்கொண்ட பிறகு, விஷம் பரவியது.
கருத்துகள் வெறுப்புக் கருத்துகள் ஆகின. தகவல்கள் பொய்த்தகவல்களாக மட்டும் இருந்தன. அங்கு தொடங்கி இந்திய அரசியல் அதன் கீழ்மட்டத்துக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டிருக்கிறது. முற்போக்குக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் இவற்றையே உத்திகளாக பா.ஜ.க வைத்திருக்கிறது.
உதாரணமாக ஒரு சம்பவம்!
ஜூன் 14, 2020 அன்று மும்பையில் தன் வீட்டில் உயிரற்ற நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் கண்டெடுக்கப்பட்டார். காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கும் முடிவுக்கு வந்தது. ஆனால் பிரச்சினை முடியவில்லை.
சுஷாந்த் சிங்கின் மரணத்தை முன் வைத்து பா.ஜ.க அரசியல் விளையாட்டு விளையாட ஆரம்பித்தது. மகாராஷ்டிர அரசு சுஷாந்த் சிங்கின் மரணத்தை சரியாக துப்பு துலக்கவில்லை என குற்றம்சாட்டி அரசியல் ஆட்டத்தை அக்கட்சித் தொடங்கியது. மறுபக்கம் பிகாரிலும் நடக்கவிருந்த சட்டசபை தேர்தலை கணக்கில் வைத்தும் ஆட்டம் ஆடியது.
சுஷாந்த் சிங்கின் பூர்விகம் பிகார். ராஜ்புட் சமூகத்தை சேர்ந்தவர். எனவே அவரின் மரணத்தைக் கொலையாகச் சித்தரித்து ராஜ்புட் சமூகத்தினரின் வாக்குகளை பிகாரில் குறி வைத்தது பா.ஜ.க. மறுபக்கத்தில் மகாராஷ்டிராவின் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பாலிவுட்டின் நட்சத்திரங்களின் பாராமுகமும் அலட்சியமுமே சுஷாந்த் சிங்கை கொன்றதாக பிரசாரம் முடுக்கிவிடப்பட்டது.
ஒருவரது மரணத்திலும் அரசியல் லாபத்தைத் தேடுவது பா.ஜ.க மற்றும் ஆர்எஸ்எஸ்ஸுக்கு வரலாற்றுப் பூர்வமாகவே கை வந்த கலை!
பிகார் மற்றும் மகாராஷ்டிராவில் பா.ஜ.க முன்னெடுத்த விஷமப் பிரசாரம் வெறும் குற்றச்சாட்டு அல்ல. எதிர்கட்சிகளின் அவதூறும் அல்ல. பிரசாரம் நடத்தப்பட்ட விதத்தைப் பற்றிய ஆய்வுப்பூர்வமான தரவுகளே வெளியாகி இருக்கின்றன. ஆய்வு நடத்தியது உள்ளூர்க்காரர்கள் கூட அல்ல. அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம்!
சுஷாந்த் சிங் மரணமடைந்த 2020ம் ஆண்டின் ஜூன் 14ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 12ம் தேதி வரை சமூக தளப் பதிவுகளையும் ட்ரெண்டிங்குகளையும் ஆய்வு செய்ததில் பா.ஜ.கவினரும் பா.ஜ.க ஆதரவாளர்களுமே அதிகப் பதிவுகளை இட்டிருக்கின்றனர்.
காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட 7,818 அரசியல்வாதிகள் மரணம் குறித்து 1,03,125 ட்வீட்டுகள் பதிவிட்டிருக்கின்றனர். காங்கிரஸும் பிற கட்சிகளும் ‘தற்கொலை’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கின்றன. பாஜக அரசியல்வாதிகள் ‘கொலை’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.
இந்திய ஊடகங்கள் தொடர்ந்து பா.ஜ.கவின் ‘கொலை’ கருத்தாடலை முன் வைத்து செய்திகளையும் செய்தித் தொகுப்புகளையும் உருவாக்கியிருக்கின்றன. டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடங்களை பிடித்தன. விஷத்துக்கு விஷம், காசுக்குக் காசு. பாஜக ஆதரவு நட்சத்திரங்கள், தனி நபர்கள், அரசியல்வாதிகள் அந்தக் கருத்தாடலை வலு சேர்க்கும் வகையில் தவறான தகவல்களை அளித்தனர். ஊடகங்கள் அவற்றை ஊதிப் பெருக்கின.
2020, ஜூன் 14ம் தேதி மரணத் தகவல் கிடைத்தபோது உரையாடல்கள் அதிகமாக மனநலம் சார்ந்தவையாகவே இருந்திருக்கின்றன. ‘கொலை’ என்கிற கருத்தாடல் அறிமுகமானதும் பாலிவுட்டில் இருக்கும் பிற சாதி நடிகர்கள், இஸ்லாமிய நடிகர்கள், அவர்களுக்குள் இருக்கும் ஒத்துழைப்பு முதலியவையாக உரையாடல்கள் வடிவம் பெற்றன. மகாராஷ்டிரக் காவல்துறை கழுவி ஊற்றப்பட்டது. #MahaGovtExposed என்றேல்லாம் ஹாஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டன.
பிரசாரம், அரசியல் லாபம் மற்றும் தேர்தல் நோக்கம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டிருந்தது என்றாலும் மறைமுகமாக இன்னொரு முக்கியமான விஷயத்தையும் அது செய்தது எனக் குறிப்பிடுகிறது ஆய்வு.
பெருந்தொற்று மற்றும் ஊரடங்குச் செய்திகள் மக்களிடம் ஏற்படுத்தியிருந்த சோர்வும் தேக்கமும் அரசின் மீதான அவநம்பிக்கையும் வெற்றிகரமாக பிரசாரத்தால் திசைதிருப்பப்பட்டன.
இவற்றுக்கிடையில் சுஷாந்தின் காதலி ரியா மற்றும் தீபிகா, சாரா அலி கான், ஷ்ரதா கபூர் முதலிய நட்சத்திரங்களும் போதைமருந்து தடுப்புப் பிரிவால் இலக்காக்கப்பட்ட சோகமும் நடந்தது.
ரியாவைப் போல், சுஷாந்தைப் போல் சம்பந்தமற்றவர்கள் மீது பழியைப் போட்டு சம்பந்தமற்ற விஷயங்களை காலத்துக்கும் பேசி, தான் செய்யும் குற்றங்களிலிருந்து தப்பிக்கும் வேலைதான் அவர்களுக்கு ஸ்டெப்பிப் புல்வெளி காலத்திலிருந்து கலை. தொழில், வரலாறு, இயல்பு எல்லாம்.
எச்சரிக்கை கொள்வோம்!