உணர்வோசை

தாய்மொழியினால் என்ன பயன்?.. தமிழ் படிக்க வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி கேட்பவர்களுக்கான பதில் இதோ!

ஆங்கிலம் பேசுதல், வர்க்க செயல்பாடாகவும் மேட்டிமைத்தன்மையாகவும் தமிழ்ச்சூழலில் அவதானிக்கப்படுவதால்தான், இரு தமிழர்கள் சந்தித்தாலும் ஆங்கிலத்தில் பேசிக் கொள்ளும் தன்மை நிலவுகிறது.

தாய்மொழியினால் என்ன பயன்?.. தமிழ் படிக்க வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி கேட்பவர்களுக்கான பதில் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குழந்தை வளர்ப்போரிடம் குழந்தைக்கு புகட்ட வேண்டிய மொழி குறித்து பல குழப்பங்கள் உண்டு.

அடிப்படையில் மூன்று கேள்விகள்தான்.

தாய்மொழியினால் என்ன பயன்?

தமிழ் படிக்க வேண்டிய அவசியம் என்ன?

குழந்தையின் வளர்ச்சி என்பது என்ன?

1. தாய்மொழியினால் என்ன பயன்?

‘ஆலமரம்’ என்ற வார்த்தை சொன்னால் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?

விழுதுகள் பரந்த அகல மரம் ஒன்று தோன்றும். கூடவே பறவைகள், சருகுகள், இலைதழைகள் இன்னும் பலவும் தோன்றலாம். அந்த மரத்தை நீங்கள் எங்கோ நேரடியாக பார்த்திருப்பீர்கள். புகைப்படத்தில் பார்த்திருந்தால் உங்கள் மனதில் ஒரு படிமமாக ஆலமரம் உறைந்திருக்காது.

‘Altar' என்ற வார்த்தையைச் சொன்னால் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?

தெரியாதோர் அநேகமாக கூகுளைத் தேடலாம். தெரிந்தோர் ஆங்கிலப் படங்கள் அல்லது புத்தகங்களில் தெரிந்திருக்கலாம். ஆனால் அந்த வார்த்தை நீங்கள் வாழும் சூழலிலும் உங்களின் பண்பாட்டின் சொற்களிலும் இல்லை. எனவே அதற்கான மனப்படிமம் உங்களுக்கு வராது. கூகுளைத் தேடியிருந்தால் அநேகமாக ‘பலிபீடம்’ அல்லது ‘மணமேடை’ என புரிந்து கொள்வீர்கள்.

தாய்மொழியினால் என்ன பயன்?.. தமிழ் படிக்க வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி கேட்பவர்களுக்கான பதில் இதோ!

சிக்கல் என்ன தெரியுமா?

மணமேடையை பலிபீடமாக குறிப்பிடும் சொல்லே altar என நீங்கள் புரிந்து கொள்ளும் வாய்ப்புதான் அச்சிக்கல்.

Altar என்ற வார்த்தைக்கான பண்பாட்டுப் பின்னணியும் வாழ்சூழலும் என்னவென யோசித்து அதற்கான contextul அர்த்தத்தை நீங்கள் தேட வேண்டும். அதற்கு தேவை தாய்மொழி!

Altar என்ற வார்த்தைக்கென ஒரு மனப்படிமம் இருக்குமென்பதை புரிந்து கொள்ள, ‘ஆலமரம்’ என்றதும் மனதில் தோன்றும் ‘மரப் படிமத்தை’ தான் வாழும் சூழலில் முதலில் குழந்தை பார்த்தறிந்திருக்க வேண்டும்.

தாய்மொழியும் தனது பண்பாட்டுச் சூழலறிவும் இல்லாது, contextual thinking திறனை குழந்தைப் பெறவே முடியாது. அதைப் பெறவில்லை எனில் எல்லா மொழிகளும் குழந்தை மேம்போக்காக மட்டுமே தெரிந்திருக்கும். ஆழம் இருக்காது.

ஆழமில்லையெனில் அறிவு சேராது. அறிவு சேராமல், வளர்ச்சி நேராது.

தாய்மொழியினால் என்ன பயன்?.. தமிழ் படிக்க வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி கேட்பவர்களுக்கான பதில் இதோ!

2. தமிழ் படிக்க வேண்டிய அவசியம் என்ன?

அடிப்படையில் தமிழ்மொழி தொன்மையான மொழி. குறைந்தபட்சம் 3000 வருடங்கள் பழமையான மொழி என்பதால், அதற்கென மிகச் செறிவான (நல்லதும் கெட்டதுமாக) பண்பாடு உண்டு. அந்த பண்பாட்டுச் செறிவை உள்ளடக்கக் கூடிய வார்த்தைகள் எல்லாவற்றையும் தமிழ் கொண்டிருக்கிறது.

உதாரணமாக, he lost his life என்றுதான் ஆங்கிலத்தில் சொல்வோம். வாழ்க்கை என்றாலும் life-தான், உயிர் என்றாலும் அங்கு life-தான். உயிர் என்கிற வார்த்தையோ அதற்கான படிமமோ சிந்தனைவெளியோ ஆங்கிலத்தில் கிடையாது.

இறந்தவர்களை நாம் மண்ணுக்குள் இட்டு புதைக்கிறோம். அல்லது தீயில் சுட்டு எரிக்கிறோம். இரண்டு இடங்களுக்கும் தமிழில் இடுகாடு, சுடுகாடு என வார்த்தைகள் உண்டு. மயிரும் முடியும் கூந்தலும் கேசமும் ஒரே விசயம்தான். மயிரை கேவலமாகவும் முடியை நல்லதாகவும் பார்க்கிறோம். இதற்குப் பின் மயிர் என்ற வார்த்தை பேசிய மக்கள் முடி என்ற வார்த்தை பேசிய மக்களால் அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு இருக்கும்.

அன்புக்கும் காதலுக்கும் பாசத்துக்கும் நமக்கு வித்தியாசம் தெரியும். Love என பொத்தாம்பொதுவாக நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. I love you, but as a friend என தமிழில் சொல்லவே முடியாது. ஏனெனில் நண்பனுக்கு நட்பு என்கிற உணர்வை தமிழ் ஒதுக்கி வைத்திருக்கிறது.

இத்தகையச் செறிவு கொண்ட தமிழை கற்கையில் உங்கள் மூளைக்கு என்ன நேருமென யோசித்துப் பாருங்கள். அத்தனை வார்த்தைகளும் அததற்கான நுட்பமான அர்த்தங்களுடன் உங்கள் மூளையில் சேமிக்கப்படும். ஒரே அர்த்தமாக தொனித்தாலும் அந்த வார்த்தைகள் எல்லாவற்றுக்கும் இடையே இருக்கும் நுட்பமான வேறுபாட்டை புரிந்து கொள்ளும் திறனான critical thinking உங்களின் மூளையின் செயல்பாட்டில் இருக்கும்.

தாய்மொழியினால் என்ன பயன்?.. தமிழ் படிக்க வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி கேட்பவர்களுக்கான பதில் இதோ!

3. குழந்தையின் வளர்ச்சி என்பது என்ன?

சிந்தை வளர்ச்சிதான் குழந்தையின் வளர்ச்சி

சிந்தை வளர்ச்சிக்கு cognitive thinking தேவை. அறிந்து புரிந்து ஏற்கனவே இருக்கும் அனுபவங்களோடு பொருத்திப் பார்த்து பின் அலசி ஆராய்ந்து சரியை தேர்ந்தெடுக்கும் முறையைதான் cognitive thinking என சொல்வார்கள். எளிமையாக பகுத்தறிவு எனக் கூட சொல்லலாம்.

உங்களுக்கு கிடைக்கக் கூடிய அறிவு அடுத்தவரை பாதிக்குமா என சிந்திக்க empathy வேண்டும். அடுத்தவரை பாதித்துவிடக் கூடாது என்பதற்கு compassion வேண்டும். அடுத்தவரை பாதித்தால் அதை உணர்ந்து சரி செய்வதற்கு sympathy வேண்டும். இவை யாவும் ஒரு குழந்தை புரிந்து கொள்ள, அக்குழந்தை வளரும் சூழலில் இருந்து புரிய வைக்க வேண்டும்.

மாறாக, நமக்கு சம்பந்தமற்ற ஒரு பண்பாட்டுச் சூழலுக்கான விஷயங்களை சொல்லிக் கொடுக்கும்போது குழந்தை நேரே பார்த்து, தொடர்புபடுத்தி, அலசி, ஆராயும் வாய்ப்பு இருக்காது. விளைவாக, ‘மட்டை மனப்பாடமாக’ மட்டுமே ஒரு value-வை அல்லது விழுமியத்தை அது கற்றுக் கொள்ள வேண்டும்.

குழந்தைக்கான cognitive thinking வளராது. சிந்தையும் வளராது. இரண்டும் வளராத குழந்தையால் சாதாரண அலுவலக வேலையைக் கூட முழுமையாக உள்வாங்கி செய்ய முடியாது. அக்குழந்தையின் வாழ்க்கையும் மனமும் மரத்திலிருந்து உதிர்ந்த சருகை போல் தக்கையாகவே மிஞ்சும்.

ஆங்கிலம் உலகை இணைக்கும் மொழிதான். அது நமக்கு தேவையானதுதான். இந்தியாவில் பிற மாநிலங்களில் இணையவும் கூட நமக்கு ஆங்கிலம் அடிப்படைதான். ஆனால் தாய்மொழியற்ற ஆங்கிலம் ஒரு வர்க்க நடவடிக்கையாக மாறுகிறது.

தாய்மொழியினால் என்ன பயன்?.. தமிழ் படிக்க வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி கேட்பவர்களுக்கான பதில் இதோ!

ஆங்கிலம் பேசுதல், வர்க்க செயல்பாடாகவும் மேட்டிமைத்தன்மையாகவும் தமிழ்ச்சூழலில் அவதானிக்கப்படுவதால்தான், இரு தமிழர்கள் சந்தித்தாலும் ஆங்கிலத்தில் பேசிக் கொள்ளும் தன்மை நிலவுகிறது.

ஆங்கிலத்தின் வழியாக உங்கள் குழந்தைக்கு ஒரு வர்க்கத்தின் மீதான பற்றை விதைக்கிறீர்கள். அது வளர்கையில் தான் இயல்பாக இருக்கும் வர்க்கநிலையை மறைக்க முற்படும். பாசாங்கு வாழ்க்கையை மேற்கொள்ளும். தனது வர்க்க நிலையைத் தாண்டிய, பொருந்தாத, படாடோப வாழ்க்கையை, நபர்களை தேர்ந்தெடுக்கும். அது நாளை உங்களையே புறக்கணிப்பதாகக் கூட மாறி விடும்.

ஆங்கிலம் வர்க்க மொழி என்றால், இந்தி ஆதிக்க மொழி!

தாய்மொழி கற்காமல் இந்தியைக் கற்கும்போது இந்தி மொழி கொண்டிருக்கும் சாதிய மேலாதிக்கம், இந்து மத மேலாதிக்கம், இந்தி மாநில கலாச்சாரங்களின் மேலாதிக்கம் ஆகியவற்றின் பிரதிநிதியாக உங்கள் குழந்தை மாறும்.

வேர் அறுத்தால் செடி தளிர்க்காது.

தாய்மொழி மறுத்தால், மனம் துளிர்க்காது.

banner

Related Stories

Related Stories