Google Chrome தனது புதிய லோகோவை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முந்தைய லோகோவில் இருந்த நிழல்கள் மட்டுமே நீக்கப்பட்டு நிறங்களின் சேர்க்கை சற்று அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய லோகோ பிப் 4ஆம் தேதியிலிருந்து வெளிவரத் தொடங்கியுள்ளது. தற்போது குரோம் கேனரியில் மட்டுமே புதிய லோகோவை பார்க்க முடியும். விரைவில் இது அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோகோவில் உள்ள சிவப்பு, நீலம், பச்சை மற்றும் மஞ்சள் போன்ற நிறங்களின் சேர்க்கை சற்று அதிகப்படுத்தப்பட்டு நிழல்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் பழைய மற்றும் புதிய லோகோவிற்கு இடையே வித்தியாசம் தெரியாமல் நெட்டிசன்கள் தடுமாறியுள்ளனர்.
இதனால், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது லோகோவை மாற்றி நெட்டிசன்களிடம் பாராட்டு பெறுவதற்குப் பதில் அதிகமான கிண்டல்களையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது Google Chrome.
"மாறுவேசத்துக்கு உண்டான மரியாதையே போச்சு", "கலர் மட்டும் தான் அதிகமாக இருக்கு.. வேற ஒன்றும் இல்ல", "இந்த நீலக்கலரை பெரிதாக்கியது தான் உங்கள் மாற்றமா?" என பல்வேறு விதங்களில் நெட்டிசன்கள் Google Chrome புதிய லோகோவை கலாய்த்து வருகின்றனர்.
நெட்டிசன்களிடம் கிண்டல் அதிகமானதை அடுத்து, "எல்லா தளங்களிலும் எங்களது லோகோ ஈர்ப்புடன் இருக்கவேண்டும் என விரும்புகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களின் விருப்ப அனுபவத்தை நாங்கள் வடிவமைக்கிறோம்" என Google Chrome வடிவமைப்பாளர் எல்வின் தெரிவித்துள்ளார்.