உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. தற்போது கொரோனா தொற்றில் இருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவியதால் மீண்டும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் உலகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் முக்கிய கவசமாக 'முகக்கவசம்' இருந்து வருகிறது.
இதனால் முகக்கவசம் அணியாதவர்களிடம் உலகம் முழுவதும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெறும் 16 விநாடிகள் மட்டுமே முகக்கவசத்தை கழற்றி மாட்டியவருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ஓடுல். இவர் சில பொருட்களை வாங்குவதற்காக ப்ரேஸ்காட்டில் உள்ள பி அண்டு எம் அங்காடிக்கு சென்றுள்ளார். அப்போது உடல்நிலை சரியில்லாததால் சிறிது நேரம் முகக்கவசத்தை கழற்றிவிட்டு பின்னர் மாட்டியுள்ளார்.
இதை அங்கிருந்த போலிஸ் ஒருவர் பார்த்துள்ளார். உடனே அவர் வழக்குப் பதிவு செய்துள்ளார். அப்போது அவர் போலிஸாரிடம் உடல்நிலை சரியில்லாததால் சுவாசிக்க முடியவில்லை என்பதால்தான் முகக்கவசத்தை கழற்றினேன் எனக் கூறியுள்ளார். ஆனால் போலிஸார் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதையடுத்து சில நாட்கள் கழித்து கிறிஸ்டோபருக்கு 100 டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என ACRO குற்றப் பதிவுத்துறையில் இருந்து கடிதம் வந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதை ஏற்க மறுத்து அவர் காவல்துறைக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அபராதத் தொகையை குறைப்பார்கள் என காத்திருந்த அவருக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. மீண்டும் வந்த அபராத கடிதத்தில் 2 ஆயிரம் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 2 லட்சம் ரூபாய் அபராதத்தைச் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டு கடிதம் வந்ததைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார். மேலும் தனக்கு கிடைக்கும் முழு சம்பளத்தையும் கொடுத்தால் கூட அந்த அபராத தொகையை என்னால் செலுத்த முடியாது என கிறிஸ்டோபர் புலம்பி வருகிறார்.