கொரோனா காரணமாக ஜனவரி 8ம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் நேற்று (பிப்.,06) காலை மறைந்தார்.
அவரது மறைவுச் செய்தியை அறிந்து பிரதமர், முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
லதா மங்கேஷ்கரின் மறைவையொட்டி மகாராஷ்டிராவில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதோடு, அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படியே நேற்று மாலை மும்பையில் உள்ள தாதர் சிவாஜி பார்க்கில் லதா மங்கேஷ்கரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. இதில் பிரதமர் மோடி, பாலிவுட் பிரபலங்களான நடிகர்கள் ஷாருக் கான், அமிர் கான், ரன்பிர் கபூர், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
அப்போது ஷாருக்கானும், அவரது மேனேஜரும் இருவரது மதத்தின்படி லதா மங்கேஷ்கருக்காக பிரார்த்தனை செய்தனர். அது தொடர்பான போட்டோ இணையத்தில் வைரலாகி பலரையும் நெகிழச்செய்தது.
இப்படி இருக்கையில் மறுமுனையில் பாஜக உட்பட சில மதவாத கும்பல்களால் இதனூடே வெறுப்பு பதிவுகளும் பரவியது. அதில், லதா மங்கேஷ்கருக்கு தனது இஸ்லாமிய முறைப்படி ‘துவா’ பிரார்த்தனையை செய்த நடிகர் ஷாருக் கான், பிரார்த்தனையை காற்றில் ஊதுவார்.
இந்த நிகழ்வை குறிப்பிட்டு, உண்மை ஏதும் அறியாத சில அறிவுஜீவிகள் ஷாருக்கானை வசைபாடினர். இதனைக் கண்ட அவரது ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் ஷாருக்கானுக்கு ஆதரவாக அவரது செயலை விளக்கியிருந்தனர்.
அதன்படி, மறைந்த லதா மங்கேஷ்கருக்காக துவா செய்த ஷாருக்கான் காற்றில் அதனை ஊதுவதற்காக முகக்கவசத்தை அகற்றினார் என தெளிவுபடுத்தியிருந்தனர். இது தொடர்பான பதிவுகள்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.