சின்னக்கலைவாணர் என்று அழைக்கப்படும் நகைசுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று தனது வீட்டில் இருந்த விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்டவே அவரது உறவினர்கள் உடனடியாக சென்னையில் உள்ள மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விவேக்கின் உடல்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக வட இந்திய மாநிலங்களில் படப்பிடிப்பு முடித்துவிட்ட வந்த நடிகர் விவேக், நேற்று காலை தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், கொரோனா தடுப்பூசியில் பின்விளைவு இல்லை என்பதை உணர்த்துவதற்காகவும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
இந்நிலையில். கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபட்டு வந்த நடிகர் விவேக்கிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது சினிமாத்துறையினர் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் நடிகர் விவேக்கிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகர் விவேக்கின் பி.ஆர்.ஓ நிகில் முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். ''விவேக் நலமாக இருக்கிறார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுகிறது. விரைவில் நலம் பெற்று செய்தியாளர்களைச் சந்திப்பார். மேலும் நடிகர் விவேக்கிற்கு தடுப்பூசி போட்டதால் மாரடைப்பு ஏற்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நடிகர் விவேக் நலம்பெறவேண்டும் என தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உடல்நலம் குன்றி சிகிச்சையில் இருக்கும் சின்னக்கலைவாணர் அண்ணன் விவேக் அவர்கள் நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப விரும்புகிறேன். அன்போடு பழகுவதிலும்-சமூக சிந்தனையுடன் செயல்படுவதிலும் அண்ணனுக்கு நிகர் அவரே. அண்ணன் அவர்கள் மீண்டு வந்து தமிழக மக்களை சிரிக்க - சிந்திக்க வைக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.