தமிழ்நாடு

பொறியியல் கல்லூரி மாணவி மனமுடைந்து தற்கொலை - அண்ணா பல்கலை. தேர்வு முடிவுகளில் குளறுபடி..?

அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் தேர்வு முடிவுகளில் குளறுபடிகளைக் களைந்து, மாணவர்களின் தேர்வு முடிவுகளை கால தாமதம் இன்றி வெளியிட வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

பொறியியல் கல்லூரி மாணவி மனமுடைந்து தற்கொலை - அண்ணா பல்கலை. தேர்வு முடிவுகளில் குளறுபடி..?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இணைய வழியில் தேர்வு எழுதிய சுமார் ஒரு லட்சம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதற்கிடையே, நன்கு படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று வந்த கடலூரைச் சேர்ந்த சந்தியா என்ற பொறியியல் கல்லூரி மாணவி தேர்வில் தோல்வி அடைந்ததால், மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாணவர்கள் பலர் முறைகேட்டில் ஈடுபட்டதால்தான் முடிவுகள் ‘நிறுத்திவைப்பு’ எனக் குறிப்பிட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது. பலருக்கு சரியான கணினி மற்றும் இணைய வசதிகள் இல்லாததால் பல்கலைக்கழகம் அறிவித்த நெறிமுறைகளின்படி தலையை அசைக்காமல் நகராமல் தேர்வு எழுத முடியவில்லை என்று மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் தேர்வு முடிவுகளில் குளறுபடிகளைக் களைந்து, மாணவர்களின் தேர்வு முடிவுகளை கால தாமதம் இன்றி வெளியிட வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளை, கடந்த மார்ச் மாதம் இணைய வழியில் (ஆன்லைன்) நடத்தியது. நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுகளை எழுதினார்கள்.

ஏப்ரல் 10 ஆம் தேதி முடிவுகள் வெளியாகின. 40 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் என்றும், முறைகேடுகளில் ஈடுபட்டதால், இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி இருப்பது, அதிர்ச்சி அளிக்கின்றது. கடந்த காலங்களில் தேர்வில் ஒருமுறை கூடத் தோல்வி அடையாத மாணவர்கள் பலர், மூன்று, நான்கு பாடங்களில் தோல்வியடைந்து உள்ளனர்.

இணைய வழியில் தேர்வு எழுதும்போது, மாணவர்கள் தனி அறையில் உட்கார்ந்து எழுத வேண்டும்; கணிணியை நேராகப் பார்த்து எழுத வேண்டும்; தலையை அசைக்கக் கூடாது; அக்கம் பக்கத்தில் வேறு எவரும் இருக்கக் கூடாது எனப் பல கட்டுப்பாடுகளை விதித்து இருந்தார்கள்.

கிராமப்புற மாணவர்கள், வீடுகளில் தனியாக உட்கார்ந்து எழுதுவதற்கு அறைகள் கிடையாது. சற்றுத் தொலைவில் பெற்றோர் உட்கார்ந்து இருந்தாலும் கூட, அதையும் முறைகேடு என, கணிணிகள் பதிவு செய்து இருக்கின்றன.

கொரோனா பேரிடரால் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், கல்லூரிக் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக சில மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்து இருப்பதாகத் தெரிகின்றது.

இத்தகைய குளறுபடிகளால், பல்லாயிரக்கணக்கான மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் அதிர்ச்சிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர். நன்கு படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று வந்த கடலூரைச் சேர்ந்த சந்தியா என்ற பொறியியல் கல்லூரி மாணவி தேர்வில் தோல்வி அடைந்ததால், மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

முதன்முறையாக, செயற்கை நுண்ணறிவு முறையில் (Artificial Intelligence evaluation system) நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வுகளில், பல குளறுபடிகளும், முறைகேடுகளும் நிகழ்ந்து இருக்கின்றன. ஒன்றரை லட்சம் மாணவர்கள் காப்பி அடித்து முறைகேடு செய்ததாகக் கூறுவதும், தேர்வு எழுதாத மாணவர்கள் சிலர் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிப்புகள் வெளியாகி இருப்பது, அண்ணா பல்கலைக்கழகத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கின்றது.

எனவே, தேர்வு முடிவுகளை உடடினயாக மறு ஆய்வு செய்து, நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள மாணவர்களின் தேர்வு முடிவுகளையும், கல்லூரிக் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள மாணவர்களின் தேர்வு முடிவுகளையும் கால தாமதம் இன்றி வெளியிட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories