தமிழ்நாடு

“1 லட்சம் பேர் முறைகேடு செய்தார்களா?” - அண்ணா பல்கலைக்கழக முடிவால் மாணவர்கள் அதிர்ச்சி - அடுத்தது என்ன?

அண்ணா பல்கலைக்கழகத்தில் சுமார் ஒரு லட்சம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

“1 லட்சம் பேர் முறைகேடு செய்தார்களா?” - அண்ணா பல்கலைக்கழக முடிவால் மாணவர்கள் அதிர்ச்சி - அடுத்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இணைய வழியில் தேர்வு எழுதிய சுமார் ஒரு லட்சம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தவேண்டிய பொறியியல் செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் தள்ளிவைத்தது.

கொரோனா பாதிப்பு சற்று குறையத் தொடங்கிய நிலையில், பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இணையவழியில் நடத்தப்பட்டன.

இந்நிலையில், முதலாமாண்டு மாணவர்கள் தவிர மற்ற மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 11-ம் தேதி இணையதளத்தில் வெளியிட்டது. இதில் லட்சக்கணக்கான மாணவர்களின் தேர்வு முடிவுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களும் பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர்.

மாணவர்கள் பலர் முறைகேட்டில் ஈடுபட்டதால்தான் முடிவுகள் ‘நிறுத்திவைப்பு’ எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. தேர்வு முடிவில் WH1 என்று குறிப்பிடப்பட்டிருந்தால் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் பொருள். WH6 எனக் குறிப்பிட்டிருந்தால் முறைகேட்டில் ஈடுபடவில்லை என்ற ‘தெளிவு’ வேண்டும் என்றும், WHRX என்பதற்கு மறுதேர்வு நடத்தப்படும் என்றும் பொருள் என விளக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் கூறுகையில், “இணையவழியில் தேர்வு எழுதும் மாணவர்கள் தலையை அசைக்கக் கூடாது, அறையில் எவ்வித சத்தமும் கேட்கக் கூடாது, மாணவர்களின் அருகில் யாரும் இருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப்பட்டன. அவற்றைப் பின்பற்றாவிட்டால் முறைகேடாக கருதப்படும்.

அந்த வகையில், சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக கருதப்படுகிறது. இதுதவிர, தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்கள், முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுபவர்கள் போன்ற காரணங்களால் சுமார் ஒரு லட்சம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும்.” எனத் தெரிவித்துள்ளனர்.

பலருக்கு சரியான கணினி மற்றும் இணைய வசதிகள் இல்லாததால் பல்கலைக்கழகம் அறிவித்த நெறிமுறைகளின்படி தலையை அசைக்காமல் நகராமல் தேர்வு எழுத முடியவில்லை என்றும், சுற்றுப்புறச் சூழல் சத்தம் வராமல் தேர்வு எழுதும் வசதி பல மாணவர்களுக்கு இல்லையென்றும் மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மாணவர்களுக்கு தகுந்த ஏற்பாடுகளைச் செய்து தராமல், இணைய வழியில் தேர்வு நடத்திய அண்ணா பல்கலைக்கழகம், மாணவர்களின் அச்சத்தை நீக்கி தேர்வு முடிவுகளை விரைவில் மறுபரிசீலனை செய்து வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories