பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் முழு உருவச்சிலை கோவை - பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுந்தராபுரம் அருகே அமைந்துள்ளது.
அங்குள்ள பெரியாரின் சிலை மீது நேற்று (ஜூலை 18) அதிகாலையளவில் மர்ம நபர்கள் காவி சாயத்தை பூசி விட்டுச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்துக்கு பெரியாரிய சிந்தனையாளர்கள், திராவிட கழகத்தினர், தி.மு.கவினர் என பல அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், சம்பவ இடத்துக்கு விரைந்த கோவை மாநகர மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முத்துசாமி மற்றும் திமுகவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்ததால் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து பெரியாரின் சிந்தனைகளை முன்னிறுத்தி முழக்கமிட்ட அவர்கள், பெரியாரின் சிலையை அவமதித்தவர்களை கண்டறிந்து உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதனையடுத்து, போத்தனூர் அண்ணாநகரைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன் என்ற நபர் தாமாக முன்வந்து பெரியார் சிலை மீது காவி சாயம் பூசியதாகக் கூறி சரணடைந்திருக்கிறார். இந்த இளைஞர் பாரத்சேனா என்ற இந்துத்வ அமைப்பைச் சேர்ந்தவர் ஆவர்.
இந்த விவகாரம் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் தீயாய் பரவியுள்ளது. காங்கிரஸின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ட்விட்டரில் #JaiPeriyar_Tamilnadu என்ற ஹேஷ்டேக் ஒன்று இன்று காலை முதல் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இந்த ஹேஷ்டேக்கை ட்விட்டரில் தீவிரமாக வட இந்தியர்களே முன்னின்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பெரியார் சிலை மீது காவி சாயம் பூசியதற்கு கண்டனங்களை தெரிவித்தும், இந்துத்வத்தை போற்றி பாடும் ஆர்.எஸ்.எஸ். போன்ற காவி கும்பலுக்கு சம்மட்டியடி அடிக்கும் வகையில் சுய மரியாதை மற்றும் சாதி பாகுபாடு குறித்து தந்தை பெரியாரின் கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.