பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் முழு உருவச்சிலை கோவை - பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுந்தராபுரம் அருகே அமைந்துள்ளது.
அங்குள்ள பெரியாரின் சிலை மீது இன்று அதிகாலையளவில் மர்ம நபர்கள் காவி சாயத்தை பூசி விட்டுச் சென்றுள்ளனர். இது தொடர்பாக தகவலறிந்த பெரியார் தொண்டர்கள், கோவை மாநகர மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முத்துசாமி மற்றும் திமுகவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்ததால் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து பெரியாரின் சிந்தனைகளை முன்னிறுத்தி முழக்கமிட்ட அவர்கள், பெரியாரின் சிலையை அவமதித்தவர்களை கண்டறிந்து உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மேலும், அதிமுக ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முத்துசாமி கண்டனம் தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் யார் எதை வேண்டுமானாலும் செய்துக்கொள்ளலாம் என்ற நிலையே இந்த எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், தி.மு.க. மக்களவைக் குழுத் துணைத்தலைவரும், மகளிரணிச் செயலாளருமான கனிமொழியும் இந்த சம்பவத்தைக் கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “தமிழக மக்களின் ஆதரவை எக்காலத்திலும் பெறமுடியாத ஒரு கும்பல் தொடர்ந்து பெரியார் சிலைகளை அவமதித்து வருகிறது. அவர்கள் மீது இந்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் ?
மான உணர்வும், சுய மரியாதையும் இல்லாத இந்த அதிமுக அரசு, தந்தை பெரியாரை அவமதிப்பதை ற்றி கண்டு கொள்ளாததில் வியப்பு ஏதுமில்லை. சமூக அமைதியை கெடுக்கும் நோக்கில் செயல்படும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.