சாத்தான்குளம் போலிஸாரால் செல்போன் கடை வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சித்திரவதை செய்யப்பட்டதற்கு பின்னர் கோவில்பட்டி சப் ஜெயிலில் பரிதாபமாக பலியாயினர். இதைக் கண்டித்து தமிழகம் முழுதும் வணிகர்கள் கடையடைப்பு செய்தனர்.
தமிழகத்தில் காட்டுதர்பார் நடத்திவரும் எடப்பாடி பழனிசாமியின் காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தைக் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக கண்டித்தார். எடப்பாடியின் அரசு, அப்பாவிகளின் கொடூர கொலையை பூசி மெழுகிக் கொண்டிருந்த வேளையில் தி.மு.க.,வினர் நீதிகேட்டு போராட்டக்களத்தில் குதித்தனர். தி.மு.க தலைவர் கொலையுண்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணமாக அறிவித்தார்.
தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., படுகொலை குறித்து தென் மண்டல போலிஸ் ஐ.ஜியிடம் பேசினார். டி.ஜி.பி., அலுவலகத்துக்கு உடனடியாக நேரில் சென்று சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட மக்களோடு இணைந்து போராட்ட களத்தில் நீதிகேட்டார்.
தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும் இது தொடர்பாக விரிவான புகார் அளித்து சாத்தான்குளம் விவகாரத்தில் தேசியத் தலைவர்கள் மற்றும் தேசிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார். கொலையானவர்களின் இல்லத்துக்கு சென்று திமுக தலைமை அறிவித்த 25 லட்ச ரூபாய் நிதியுதவியை அளித்து ஆறுதல் கூறினார்.
இதனிடையே இன்று காலையும் இரண்டாவது முறையாக தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். இதனைத்தொடர்ந்து சாத்தான்குளம் கொடுமைக்கு நீதி கேட்டு தனது முகக் கவசத்தையே போராட்டத்தின் ஆயுதமாக கனிமொழி எம்.பி., மாற்றியுள்ளார்.
அவர் இன்று கருப்பு, சிவப்பு வண்ணத்தில் அணிந்துள்ள முகக் கவசத்தில் ‘JusticeForJayarajAndFenix’ என்ற வாசகத்தை பொறித்து தனது முகக் கவசத்தையே நீதிகேட்கும் ஆயுதமாக மாற்றியுள்ளார். கனிமொழி எம்.பி.,யின் இந்த போராட்ட முக கவசம் இணையத்தில் வைரலாகி வருகிறது.