சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய தந்தையும் மகனும் போலிஸாரின் அதிகார வன்முறைக்கு தங்களது இன்னுயிரை பரிதாபமாக இழந்திருக்கிறார்கள். படுகொலை செய்யப்பட்ட தந்தை மகனுக்கு நீதி வேண்டி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகள் உண்டாகியுள்ளது.
சாமானிய மக்கள் மீது தங்களது அதிகார அத்துமீறல்களை பிரயோகித்த காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கோரி அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் வலியுறுத்தி சட்டப் போராட்டங்களும், களத்திலும் இறங்கி போராடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த படுகொலை தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மாவட்ட நீதிபதி விசாரணை செய்து முழுமையான அறிக்கையை தாக்க செய்ய வேண்டும் என்றும், அதற்கு காவல்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும், வழக்குத் தொடர்பாக அனைத்து ஆவணங்கள், சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து, சாத்தான்குளம் லாக்கப் மரணம் குறித்து விசாரணையை நடத்தி வந்த மாவட்ட நீதிபதியிடம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரான குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபல், காவலர் மகாராஜா ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் நீதிபதியிடமே தகாத வார்த்தைகளை பிரயோகம் செய்திருக்கிறார்கள்.
அவ்வாறு காவல்துறையினர் கீழ்த்தரமாக பேசியதை நீதிபதியும் தன்னுடைய விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வெளியாக பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், அரசு தரப்பில் இருந்து கடுமையான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இது போன்ற போலிஸார் சுதந்திரமாக திரிந்து வருகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.