உத்தர பிரதேச மாநிலம், ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள பாத்தியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கல்கு பிரஜாபதி (வயது 23). எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ள இவர் விவசாயம் செய்து வருகிறார்.
இவருக்கும், மகோபா மாவட்டம், புணியா கிராமத்தைச் சேர்ந்த ரிங்கி என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க இரு தரப்பு குடும்பத்தினரும் சுமார் 5 மாதங்களுக்கு முன்பாக முடிவு செய்தனர்.
இவர்களின் திருமணம், புணியா கிராமத்தில் உள்ள கோவிலில் ஏப்ரல் 25-ந்தேதி நடத்துவது என நிச்சயிக்கப்பட்டது. பெண் வீட்டில் திருமணத்துக்கான அழைப்பிதழ்கள் அச்சடித்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கப்பட்டு, தடபுடலாக ஏற்பாடுகள் நடந்து வந்தன.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. பொது போக்குவரத்து சாதனங்கள் எதுவும் இயங்கவில்லை.
திருமணத்துக்கு அனுமதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் மணமகன் கல்கு பிரஜாபதி விண்ணப்பித்தார். ஆனால் அதற்கான அனுமதி வந்து சேர்ந்தபாடில்லை. இதையடுத்து கல்கு பிரஜாபதி மணமகள் ஊருக்கு சைக்கிளில் சென்று நிச்சயித்தபடி திருமணத்தை முடித்துக்கொண்டு ஊர் திரும்ப முடிவு எடுத்தார். அதன்படியே 100 கி.மீ., தூரம் சைக்கிளில் பயணம் செய்து திருமணம் செய்துகொண்டு மணப்பெண்ணை அதே சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ஊர் திரும்பியுள்ளார்.
இதுகுறித்து பிரஜாபதி கூறியதாவது:-
திருமணத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் பெண் வீட்டார் அழைப்பிதழ் அச்சடித்து எல்லோருக்கும் கொடுத்து விட்டார்கள். நிச்சயித்த நாளில் திருமணம் முடிப்பதில் அவர்கள் கவனமாக இருந்தார்கள். ஊரடங்குக்கு மத்தியிலும் அவர்கள் தரப்பில் இருந்து எங்களுக்கு போன் செய்தார்கள். அதன்பின்னர்தான் நானும் நிச்சயித்தபடி திருமணத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.
என்னிடம் மோட்டார் சைக்கிள் இருக்கிறது. ஆனால் ஓட்டுவதற்கான லைசென்ஸ் இல்லை. என்ன செய்வது என்று யோசித்தபோதுதான் சைக்கிளில் போய்விடலாம் என முடிவு செய்தேன். 100 கி.மீ. தொலைவில் உள்ள மணமகள் ஊருக்கு சைக்கிளில் புறப்பட்டேன். கொரோனா வைரஸ் தொற்று பரவிவிடாமல் இருப்பதற்காக வாயில் ஒரு கைக்குட்டையால் கட்டிக்கொண்டேன். ஒரு ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட் அணிந்து கொண்டு சைக்கிளில் புறப்பட்டேன். அங்கு போய்ச் சேர்ந்தேன். கோவிலில் திருமணம் நடந்தது. தவிர்க்க முடியாத சடங்குகளை மட்டும் செய்தோம்.
திருமணம் முடிந்த கையோடு மாலையும் கழுத்துமாய் என் மனைவியை சைக்கிளில் பின்னால் உட்கார வைத்து மறுபடியும் 100 கி.மீ. தொலைவுக்கு பயணம். இதோ, ஊர் வந்து சேர்ந்துவிட்டேன். இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது.
இவ்வாறு அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
ஊரடங்கில் சைக்கிள் சாகச பயணம் மேற்கொண்ட பிரஜாபதி மணப்பெண் பிங்கியுடன் சைக்கிளில் ஊர்திரும்பியதை அவ்வூர் மக்கள் வெகுவாக வியந்தும், பாராட்டியும் வருகின்றனர். ஊரடங்கு முடிந்ததும் திருமண விருந்து வைக்க பிரஜாபதி- பிங்கி தம்பதியினர் தயாராகி வருகின்றனர்.