உலகின் மிகப் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்கின் நிறுவனம் தான் டெஸ்லா. அமெரிக்காவின் எலக்ட்ரிக் வாகன நிறுவனமான டெஸ்லா, சர்வதேச அளவில் எலக்ட்ரிக் வாகன பிரிவில் முக்கிய இடம் வகித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பால் ஏற்கனவே கடும் இழப்பை அவரது டெஸ்லா நிறுவனம் சந்தித்துள்ள வேளையில் அதன் சி.இ.ஒ ஆன எலான் மஸ்க் பகிர்ந்த ட்விட்டர் பதிவால் 14 பில்லியன் டாலர்களை அந்த நிறுவனம் இழந்துள்ளது.
ட்விட்டரில் பிரபலமாக இயங்கும் எலான் மஸ்க், கொரோனா பாதிப்பு குறித்து பீதி அடைவது முட்டாள்தனமானது என பகிர்ந்து பெரும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டார். அதுமட்டுமின்றி, நாய் குறித்த மீம் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த எலானுக்கு “ஜோக் திருடன்” எனும் பட்டம் சமீபத்தில் கிடைத்தது.
அதற்கு காரணம் எலான் மஸ்க் பகிர்ந்த நாயின் புகைப்படம் அமெரிக்காவை சேர்ந்த வேறொருவருடையது என்றும் அவரே அது, தன்னுடைய ஜோக் எனவும், அதை திருடி பதிவிட்டதற்காக டெஸ்லா சிஇஓ தனக்கு கார் ஒன்றைத் தரவேண்டும் என்றும் கேட்டிருந்தார். இதனால் எலான் மஸ்கை “ஜோக் திருடன்” என சமூக வலைதளத்தில் பலரும் கேலி செய்தனர்.
இந்நிலையில் தற்போது தனது நிறுவனத்தின் பங்குகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டால் 14 பில்லியன் டாலர்களை அவரது நிறுவனம் இழந்துள்ளது. அதாவது, ‘டெஸ்லாவின் பங்குகள் விலை மிக அதிகம் ஐஎம்ஓ’ என்றும் மற்றொரு ட்விட்டர் பதிவில், ‘மக்களுக்கு அவர்களது சுதந்திரத்தை மீண்டும் தாருங்கள்’ எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அவர் பதிவிட்ட சில மணிநேரங்களிலேயே டெஸ்லாவின் பங்குகள் சரிந்துள்ளன. அந்த சரிவால் 14 பில்லியன் டாலர்களை டெஸ்லா நிறுவனம் இழந்துள்ளது. அதேபோல், 3 பில்லியன் டாலர்கள் அளவுக்கு எலான் மஸ்க்கும் நஷ்டத்தை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பாதிப்புக்கு எலான் மஸ்க் பதிவிட்ட கடைசி 7 ட்விட்டர் பதிவுகளே காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் விளையாட்டாக ட்விட்டரில் பகிர்ந்தீர்களா என வால் ஸ்ட்ரீட் பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு இல்லை என்று எலான் மஸ்க் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.