உத்திரப் பிரதேச மாநில ஹாப்பூர் மாவட்டத்தில் சாம்கிரி கிராமத்தைச் சேர்ந்த ஷமீம் என்பவர் அவரது மனைவியுடன் சிறிய குடிசை ஒன்றில் வாழ்ந்து வருகிறார். வறுமையில் வாழும் அவரது வீட்டில் ஒரு மின் விளக்கு மற்றும் ஒரு மின் விசிறி மட்டுமே இருந்துள்ளது. பெரும்பாலும் இரவு நேரத்தில் குறிபிட்ட மணி நேரம் மட்டுமே அதனை உபயோகப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரம் அவரது வீட்டிற்கு மின் கட்டணம் ரூ.128 கோடிக்கு (128,45,95,444) மேல் வந்துள்ளது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த முதியவர் மின் வாரிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த அதிகாரியிடம், “எங்கள் வீட்டில் ஒரு மின் விசறி மற்றும் ஒரு மின் விளக்கு மட்டுமே உள்ளது, அதற்கு மின் கட்டணம் ரூ.128 கோடிக்கு மேல் வந்துள்ளது” என முறையிட்டுள்ளார். ஆனால் அவர் கூறியதை காதில் வாங்கிக் கொள்ளாத அதிகாரி மின் கட்டணத்தை உடனடியாக செலுத்திவிடுங்கள். இல்லாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
பின்னர், இதுகுறித்த செய்திகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது, இதனையடுத்து ஆங்கில தொலைக்காட்டிக்கு பேட்டியளித்த ஷமீம், “ எங்கள் வீட்டில் ஒரு மின் விசறி மற்றும் ஒரு மின் விளக்கு மட்டுமே உள்ளது, அதற்கி 128 கோடிக்கு மேல் மின் கட்டணம் வந்தது எப்படியென்றே தெரியவில்லை, இது எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதுகுறித்து அதிகாரியிடம் முறையிட்ட போது அவர் எங்கள் கோரிக்கைகளை செவிகளில் வாங்கிக் கொள்ளவில்லை. மாதமானால் எங்களுக்கு மின் கட்டணம் ரூ.500 தான் ஆகும். ஆனால் தற்போது வந்துள்ள மின் கட்டணத்தைப் பார்க்கும் போது, ஹாப்பூர் நகரத்தின் மொத்த மின் கட்டணத்தையும் எங்களை செலுத்த சொல்வது போல் உள்ளது. இந்த தொகையை பொருளாதாரத்தில் நலிவடைந்த எங்களால் எப்படி செலுத்த முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும் போது, இது ஒரு தொழில்நுட்ப கோளாறு என்றும் விரைவில் இந்த பிரச்சனை சரி செய்யப்படும். மேலும் இதல்லாம் ஒரு பெரிய விசயம் இல்லை என்ன சர்வ சாதரணமாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
இது சாதாரன தொழில்நுட்ப பிரச்சனை என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது. அதனை அறிந்துதான் முதியவர், அதிகாரிகளிடம் முறையிட வந்துள்ளார். ஆனால் அதிகாரிகள் அவரின் கோரிக்கையை கேட்காமல் அனுப்பி வைத்துவிட்டனர். அதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானது சாதாரண விசயமா என அதிகாரியின் பதிலுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் குவிந்துள்ளது.