சென்னை எழும்பூர் டான் பாஸ்கோ சீனியர் செகண்டரி பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அரசியல் அமைப்பு நாள் உறுதி மொழியும் ஏற்கப்பட்டது. அதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், “ பாலியல் விழிப்புணர்வுக்காக இன்று பல முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளது. 14417,1098 உள்ளிட்ட உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.குழந்தைகளுக்கு மட்டுமல்ல அது ஆசிரியர்களுக்கான புகார் எண்களாக 181 உள்ளது.
இதுவரை 86,150 மாணவர்களுக்கு கேம்ப்புகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 8615 ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு குழந்தைகளாலும், குழந்தைகளுக்கு பெரியவர்களாலும் நடைபெறும் குற்றம் குறித்து நாம் பேச வேண்டும்.
அரசியலமைப்பு தினமான இன்று அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளை குழந்தைகளிடம் இருந்து விதைக்க வேண்டும். பாலியல் சீண்டல்கள் மட்டுமல்ல குழந்தைகள் எதற்கெல்லாம் பயப்படுகிறார்களோ அதுவும் சீண்டல்கள்தான். பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது ஆண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கு நிகரான பாலியல் சீண்டல்கள் நடைபெறுவது ஆய்வுகளில் தெரிகிறது...
செய்திகளை விழிப்புணர்வுக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். மாணவர் மனசு புகார் பெட்டியில் வரும் புகார்களை காலை நேரத்தில் நடக்கும் கூட்டத்தில் (assembly) ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும். மாணவர்களுக்கு Good Touch, Bad Touch சொல்லி தர வேண்டும். சிறார்களுக்கான விழிப்புணர்வு கார்ட்டூன்கள் மற்றும் படங்களை வழங்கி தர வேண்டும்..
முதல்வரின் ஆலோசனைகளுடன் விழிப்புணர்வு குறும்படத்தை யார் வேண்டுமானாலும் செய்யும் வகையில் போட்டி நடைபெறும். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும். சமூகத்தில் நடைபெற்ற வரும் செயல்கள், பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை குறும்படமாக எடுக்கலாம்” என்று கூறினார்.