அரசியல்

“அதானி ஊழலை திசைத் திருப்ப பார்க்கிறார்” - மருத்துவர் ராமதாஸ் அறிக்கைக்கு வைகோ கண்டனம்!

அதானி ஊழல் பிரச்சினையில் மருத்துவர் ராமதாஸ் திசை திருப்ப முனைவதாகவும், பொய்யான வதந்திகளுக்கெல்லாம் முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் மதிமுக எம்.பி. வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“அதானி ஊழலை திசைத் திருப்ப பார்க்கிறார்” - மருத்துவர் ராமதாஸ் அறிக்கைக்கு வைகோ கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அதானி ஊழல் பிரச்சினையில் மருத்துவர் ராமதாஸ் திசை திருப்ப முனைவதாகவும், பொய்யான வதந்திகளுக்கெல்லாம் முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் மதிமுக எம்.பி. வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

அதானியின் கிரீன் எனர்ஜி நிறுவனம் ஒன்றிய அரசு நிறுவனமான எஸ்.இ.சி.ஐ (Solar Energy Corporation of India Limited) சூரிய ஒளி மின் திட்ட ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இந்திய மின்வாரிய அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் (சுமார் 2,100 கோடி ரூபாய்) லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து 20,000 கோடி முதலீடு பெற்றுள்ளது. இந்த ஊழல் குற்றச்சாட்டில் அதானி உள்பட 7 பேருக்கு நியூயார்க் நீதிமன்றம்நவம்பர் 21 ஆம் தேதி அன்று பிடிவாரண்ட் பிறப்பித்திருக்கிறது.

இந்த வழக்கில் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகனும் அதானியின் கிரீன் எனர்ஜி நிறுவன நிர்வாக இயக்குனருமான சாகர் அதானி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மன் கிடைத்த 21 நாட்களுக்குள் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க வேண்டும். இல்லையென்றால் சிவில் நடைமுறை சட்ட விதி 12 இன் படி புகார் மீதான தீர்ப்பு அதானி குழுமத்திற்கு எதிராக அமையும் என்றும், அமெரிக்க நீதிமன்றம் அனுப்பிய சம்மனில் கூறப்பட்டுள்ளது.

ஹிண்டன்பார்க் அறிக்கை முதல் சூரிய ஒளி மின் திட்ட ஒப்பந்த ஊழல் மீதான நியூயார்க் நீதிமன்ற வழக்கு வரை அதானி குழுமம் செய்த அனைத்து முறைகேடுகளும் இந்திய பொருளாதாரத்தில் விபரீதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு விசாரணை குழுவுக்கு நரேந்திர மோடி அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுத்து வருகிறது.

தலைமை அமைச்சர் நரேந்திர மோடி முதன் முதலில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற போது, அவர் பயணித்த விமானத்திலேயே கௌதம் அதானியை உடன் அழைத்துச் சென்றார். அதுமட்டுமின்றி, அதானி நிறுவனத்திற்கு 6200 கோடி கடன் கொடுப்பதற்கு பரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டு ஏற்பாடு செய்தார் என்பதெல்லாம் நாடறிந்த உண்மைகள்.

எனவே, இந்தப் பிரச்சனையில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தான் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. இந்தச் சூழலில் அதானி குழுமத்திற்கு நெருக்கமான பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை தொடுக்க வேண்டிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வதந்திகளை செய்தியாக்கும் நோக்கத்தில் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தமிழக முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்கள் மீது குற்றம் சாட்டி அறிக்கை விடுத்தார்.

மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தலைமை அமைச்சர் மீது ஏன் குற்றச்சாட்டு முன்வைக்க வில்லை?

எதிர்கட்சிகளை மிரட்டுவதற்கு அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்தும் ஒன்றிய அரசு, அதானி மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே? ஏன் இதுகுறித்து பாமக வலியுறுத்தவில்லை?

திமுக மீதும், தமிழக அரசு மீதும் புழுதி வாரித் தூற்றும் நோக்கத்தோடு அறிக்கை கொடுத்தார். அது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து அறிக்கை தந்து இருக்கிறார். பொறுப்பற்ற பொய் வதந்திகளுக்கு எல்லாம் முதலமைச்சர் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. அதனால்தான் முதலமைச்சர் அவர்கள் சரியான பதிலை ஒரு வரியில் சொல்லிவிட்டார்.

இந்தப் பிரச்சனையில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்க பாமக தயாரா? பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு பிரச்சனையை திசை திருப்ப பாமக தலைவர் முயற்சிக்கிறார். ஆனால் அந்த முயற்சி எல்லாம் பயனற்று போகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories