தமிழ்நாடு குற்ற வழக்கு் தொடர்வுத்துறையின் இயக்குநர் சித்ராதேவி விருப்ப ஓய்வில் சென்றதால் அந்த இடம் காலியாக இருந்தது. அதற்கு அடுத்த இடத்திலிருந்த இனை இயக்குநரை பதவி உயர்வின் மூலம் பி.என்.எஸ் சட்டப் பிரிவுகளின்படி இயக்குநராக நியமிக்க வழியில்லை.
எனவே தற்காலிக பொறுப்பு இயக்குநராக மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டார்.
மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் தற்காலிக இயக்குநராக பொறுப்பேற்றதால், தனது நீதிமன்ற பணி மிகவும் பாதிக்கப்படுவதால் நிரந்தர இயக்குநரை நியமித்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கடிதங்களின் வாயிலாக அசன் முகமது, தமிழ்நாடு அரசிடம் கோரினார்.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு இயக்குநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்களை அனுப்பக்கோரி விளம்பரம் செய்திருந்தது. அதன் அடிப்படையில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான தேர்வுகுழு தகுதியான விண்ணப்பதாரர்களை அழைத்து நேர்முக தேர்வு நடத்தியது.
இந்நிலையில், குற்ற வழக்கு தொடர்வுத் துறையின் புதிய இயக்குநராக வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணராஜாவை தேர்வு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. அதனடிப்படையில் வழக்கிறிஞர் கிருஷ்ணராஜா இயக்குநராக பொறுப்பேற்றார்.
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கிருஷ்ணராஜா மதுரையை சேர்ந்தவர். உயர்நிலை, மேல்நிலை கல்வியை மதுரை ஐக்கிய கிறிஸ்தவ மேல்நிலை பள்ளி மற்றும் தியாகராசர் மேல்நிலைப் பள்ளியிலும் முடித்து, மதுரைக் கல்லூரியில் இளங்கலை சமுகவியலில் பட்டம் பெற்றவர். இவர், மதுரை சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்று 1990ல் வழக்கறிஞராக பதிவு செய்தார்.
பிறகு, கிருஷ்ணராஜா அவர்கள் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் நிலை வழக்கறிஞராகவும், சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞராகவும், சென்னை மாநகர கூடுதல் பப்ளிக் பிராசிக்கியூட்டராகவும் பணிபுரிந்தவர்.