பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தின் ஜான்சி பகுதியில் அமைந்துள்ளது லட்சுமிபாய் அரசு மருத்துவமனைக் கல்லூரி. இங்கு பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த நவ.15-ம் தேதி குழந்தைகள் வார்டில் நள்ளிரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது மற்ற பகுதிகளுக்கும் பரவிய நிலையில், பலரும் அலறியடித்தனர்.
தொடர்ந்து அங்கிருந்த ஊழியர்கள் குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், 39 குழந்தைகள் மட்டுமே உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்; 10 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சிகிச்சையில் இருந்த மேலும் 2 குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். தற்போது 37 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழந்தைகள் சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து காரணமாக பலரும் உ.பி. பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, உயிரிழந்த குழந்தைகளுக்கு இரங்கல்களும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தற்போது குழந்தைகள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட இளைஞரின் 2 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தீ விபத்து ஏற்பட்ட குழந்தைகள் வார்டின் வெளியே, கூலி தொழிலாளியான யாகூப் மன்சூரி (Yakoob Mansuri) என்ற இளைஞர் தூங்கி கொண்டிருந்துள்ளார்.
அப்போது தீ விபத்து ஏற்பட்டதையறிந்த உடனே, ஜன்னல் கண்ணாடியை உடைத்து புகைக்கு மத்தியில் உள்ளே சென்று 7 பச்சிளம் குழந்தைகளை மீட்டார்.
எனினும், அதே மருத்துவமனையில் தனது இரட்டை பெண் குழந்தைகளை மீட்க தவறிவிட்டார். அந்த பெண் குழந்தைகள் மறுநாள் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். தனது குழந்தைகள், தனது உயிர் என்று எதையும் பொருட்படுத்தாமல், 7 குழந்தைகள் யாகூப் கைப்பற்றியுள்ளது அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என யாகூப் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.