தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக, ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்கள் நலன் சார்ந்த பல விஷயங்களில் பல முன்னெடுப்புகளை நிகழ்த்தி வருகிறது. அதில் கல்வி மற்றும் மருத்துவத்துக்கு பெருமளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மருத்துவத்தில் பல விஷயங்கள் செய்யப்பட்டு வருகிறது.
அதில் ஒன்று தான் சாலை விபத்தை தடுப்பதற்கான அரசின் விழிப்புணர்வுகள். விழிப்புணர்வு மட்டுமின்றி, இதனை மிகவும் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் சாலை விபத்துகள் இந்த ஆண்டு குறைந்தே காணப்படுகிறது. எனினும் அவ்வப்போது நிகழும் சாலை விபத்துகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று புகார் எழுந்த வண்ணமாக இருந்தது.
இதன் காரணமாவே திராவிட மாடல் ஆட்சி, 'இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48' என்ற திட்டத்தை கடந்த 2021, டிச.18-ம் தேதியன்று மேல்மருவத்தூரில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த திட்டத்தின் மூலம் 'Golden Hour' - அதாவது விபத்துக்குள்ளானவர்களை குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்க முடியும்.
இத்திட்டத்தின் முக்கிய அங்கமாக, சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு, மருத்துவச் சிகிச்சைகள் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த திட்டத்தின் மூலம் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.
இந்த மகதத்துவமான திட்டத்தில் 228 அரசு மருத்துவமனைகள், 445 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 673 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. நாட்டிற்கே முன்னோடியாக விளங்கும் இந்த மகத்தான திட்டத்தின் மூலம் இதுவரை 3 லட்சம் பயனாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இந்த சூழலில் இந்த திட்டம் தனியார் மருத்துவமனையில் செயல்பாட்டில் இல்லை என்று தற்போது திராவிட மாடல் ஆட்சியின் மீதுள்ள பொறாமையில் வதந்தி பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் தவறான தகவல் என்று தமிழ்நாட்டின் Fact Check தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் TN Fact Check வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :
“ ‘இன்னுயிர் 48’ திட்டம் 400-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் செயல்பாட்டில் இல்லை. கடந்த ஓராண்டில் இந்த 400 மருத்துவமனைகளில் ஒரு நோயாளி கூட சிகிச்சை மேற்கொள்ளவில்லை” என்று சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.
இது முற்றிலும் பொய்யான தகவல்.
'இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் மூலம் 18.12.2021 முதல் 12.11.2024 வரை 3,04,419 பயனாளிகளுக்கு ரூ269.23 கோடி ரூபாய் செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களின் இன்னுயிர் காக்கப்பட்டுள்ளது. இதில், தனியார் மருத்துவமனைகளில் ரூ.38.35 கோடி செலவில் 23,603 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11.01.2023 முதல் 12.11.2024 வரையில், தனியார் மருத்துவமனைகளில் ரூ.9.77 கோடி செலவில் 5,990 பேருக்கு இத்திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது' என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை விளக்கமளித்துள்ளது."
- என்று விளக்கமளித்துள்ளது.
இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பற்றிய விவரங்கள், மாவட்ட வாரியாக பட்டியலிடப்பட்டு பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் https://cmchistn.com என்ற வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இத்திட்டம் குறித்து மேலும் விவரங்கள் அறிய கட்டணமில்லா தொலைபேசி எண் 104-ஐ தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைப்பதோடு அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவினங்களை குறைக்கும் இந்த உயிர் காக்கும் உன்னதத் திட்டத்தின்கீழ் விபத்து நிகழும் பகுதிகளுக்கு அருகாமையிலுள்ள 683 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3 லட்சம் பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு சிகிச்சை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.