உத்தர பிரதேச மாநிலம், மீரட் நகரில் அமைந்துள்ளது உமேஷ் விகாஸ் காலனி. இங்கு அஞ்சலி என்ற பெண் வழக்கறிஞர் வசித்து வந்தார். திருமணமாகி கணவருடன் விவாகரத்து பெற்ற அஞ்சலி, அந்த பகுதியில் இருக்கும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் வழக்கம்போல் தனது வீட்டின் அருகே இருக்கும் கடையில் பொருட்கள் வாங்கி, வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், அங்கு வந்த மர்ம நபர்கள் இவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்வில் பெண் வழக்கறிஞர் அஞ்சலி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். உ.பி-யை உலுக்கிய இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அஞ்சலியின் முன்னாள் கணவர் நிதின் குப்தாவுக்கு இதில் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர்.
ஏனெனில், விவகாரத்து பெற்ற பின், முன்னாள் கணவர் வீட்டிலேயே அஞ்சலி வசித்து வந்துள்ளார். இதனால் அஞ்சலிக்கும், அவரது முன்னாள் கணவர் குடும்பத்தினருக்கும் தகராறு இருந்துள்ளது. இதன் காரணமாக நிதின் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், சில மாதங்களுக்கு பிறகு இதிலிருந்து அவர்களை விடுவித்தனர்.
எனினும் இந்த கொலையில் தொடர்புடைய, கூலிப்படைத் தலைவன் நீரஜ் சர்மா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சூழலில் கூலிப்படைத் தலைவன் நீரஜ் சர்மா சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். அவ்வாறு வெளியே வந்த அவர், தன்னை கொலை செய்ய சொல்லிய நபரிடம், கொலைக்கான மீதித் தொகையை கேட்டுள்ளார்.
ஆனால் அவர் கொடுக்க முடியாது என்று கூறியவுடனே, இந்த நிகழ்வு குறித்து கூலிப்படைத் தலைவன் நீரஜ் சர்மா போலீசிடம் கூறியது மட்டுமின்றி, தனக்கு தர வேண்டிய மீதித்தொகையை வாங்கி தருமாறும் புகார் அளித்துள்ளார்.
அதாவது, விவாகரத்து பெற்ற பிறகும், தனது முன்னாள் கணவர் நிதி குப்தாவுக்கு சொந்தமான வீட்டில் இருந்துள்ளார் பெண் வழக்கறிஞர் அஞ்சலி. அஞ்சலியை காலி செய்யுமாறு பலமுறை கூறியும், அவர் காலி செய்யவில்லை. இருப்பினும் இந்த வீட்டை யாஷ்பால் மற்றும் சுரேஷ் பாட்டியா ஆகியோருக்கு விற்றுள்ளார் நிதின் குப்தா.
பின்னர் வீட்டை வாங்கியவர்களுக்கு அஞ்சலியை அழைத்து பேசி, வீட்டை காலி செய்யுமாறு மிரட்டியுள்ளனர். ஆனால் மிரட்டலுக்கு அஞ்சாத அஞ்சலி, காலி செய்ய மறுத்து அவர்களிடமும் தகராறில் ஈட்டுபட்டுள்ளார். இதனால் முன்னாள் கணவரின் குடும்பத்தினர் அஞ்சலியை கொலை செய்ய திட்டம் தீட்டி, கூலிப்படைத் தலைவன் நீரஜ் சர்மாவை நாடி, ரூ.20 லட்சம் பேரம் பேசி, அதில் முன் பணமாக ரூ.1 லட்சத்தை கொடுத்துள்ளனர்.
இதையடுத்து நீரஜும், அஞ்சலியை கொலை செய்து விட்டு சிறை சென்றுள்ளார். இந்த சூழலில் அண்மையில் திரும்பி வந்த நீரஜ், மீதி தொகையான ரூ.19 லட்சம் பணத்தை கேட்கவே, அஞ்சலியின் முன்னாள் கணவர் நிதின் மற்றும் அவரது குடும்பத்தினர் தர மறுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த கூலிப்படைத் தலைவன் நீரஜ் சர்மா, மீரட் நகர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் கொலையில் தனக்கு வர வேண்டிய பாக்கி கூலித் தொகையை பெற்றுத் தருமாறு புகார் மனு அளித்துள்ளார்.
மேலும் உயிரிழந்த அஞ்சலியின் கணவரான நிதின் குப்தா மற்றும் அவரது குடும்பத்தினருடன், அவர் பேசிய தொலைபேசி உரையாடல் ஆதாரங்களையும் போலீஸாரிடம் அளித்துள்ளார். அதோடு ரூ.20 லட்சம் பணம் மட்டுமின்றி, டி.பி நகரில் உள்ள 5 கடைகளையும் தருவதாக அவர்கள் கூறியதால்தான், அஞ்சலியின் கொலையில் அவர்கள் குடும்பத்தினர் பெயரை குறிப்பிடாமல் இருந்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அஞ்சலியின் முன்னாள் கணவர் நிதின் குப்தா, மாமியார் சரள் குப்தா, மாமனார் பவன் குப்தா மற்றும் தயானந்த சர்மா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து, இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்யத் தொடங்கியுள்ளனர். கூலிக்காக கொலை செய்த கூலிப்படைத் தலைவனே, பாக்கி கூலியை கேட்டு, கொலை செய்ய சொன்னவர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.