தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை வானிலை மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "கடந்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் அநேக சில இடங்களில், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. ஐந்து இடங்களில் அதி கனமழையும், 48 மிக கனமழையும், 21 இடங்களில் அதி கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 30 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அக்டோபர் 1 முதல் இன்று வரை வடகிழக்கு பருவமழை 138 மி.மீ. அளவு பெய்துள்ளது. இது இயல்பான அளவான 71 மி.மீ விட 94 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது.
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 280 கி.மீ, புதுவைக்கு கிழக்கு தென்கிழக்கு பகுதியில் 320 கிலோமீட்டர், ஆந்திர பிரதேசம் நல்லூருக்கு தென்கிழக்கு சுமார் 170 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுவைக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் கரையை கடக்கும்.
இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.அடுத்த 4 தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதியில் அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் கடலில் உள்ளது. இன்னும் வலுவிழக்காமல் கரையை நோக்கி வருகிறது. அது கரையை கடக்கும் பொழுது ஒரு சில இடங்களில் அதிக கன மழை பெய்யக்கூடும். ரெட் அலர்ட் என்பது 24 மணி நேரத்திற்கான மழை எச்சரிக்கை. எனவே முன்னெச்சரிக்கையாக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலில் இருப்பதால் கரையை நோக்கி வருவதாலும் நாளை காலை அருகில் வர வாய்ப்பிருப்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
நாளை காலை காற்றழுத்த தாழ்வுமண்டலம் சென்னைக்கு அருகில் வர இருப்பதால் அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.காற்றழுத்த தாழ்வுமண்டலம் தற்பொழுது புயலாக மாற வாய்ப்பில்லை. எனினும் கரையை கடக்கும்போது 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்" எனத் தெரிவித்தார்.