ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் இந்த மாதம் சட்டபேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இரண்டு மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் (நவ.18) பிரசாரம் நிறைவடைகிறது. தொடர்ந்து மகாராஷ்டிராவில் வரும் 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு இன்று இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெறும் நிலையில், இங்கு இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சிவ சேனா (உத்தவ் தாக்கரே) தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்த நிலையில், பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்தார்.
அப்போது மக்கள் மத்தியில் இறுதி பிரசாரம் மேற்கொண்ட உத்தவ் தாக்கரே பேசுகையில், "மோடியின் உத்தரவாதம் எடுபடவில்லை என்பதால்தான் பிரதமர் மோடி பால்தாக்கரே பெயரை சொல்லி வாக்கு சேகரிக்கிறார். பாஜக தலைமையிலான கூட்டணி, மகாராஷ்டிராவில் அதானி ஆட்சியை கொண்டு வர முயற்சிக்கிறது.
ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனே அதானிக்கு ஆதரவான திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்வோம். அதுமட்டுமில்லாமல், அதானிக்கு கொடுத்த நிலமும் திரும்ப பெறப்பட்டு, தாராவி மக்களுக்கு தாராவியிலேயே வீடு வழங்கப்படும். இப்போது நடக்கும் தேர்தல் துரோகிகள் வெற்றி பெறவேண்டுமா அல்லது மகாராஷ்டிராவை நேசிக்கக்கூடியவர்கள் வெற்றி பெறவேண்டுமா என்பதை மக்களாகிய நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால், குஜராத்தில் பட்டாசு வெடிப்பார்கள். இப்போது ஆட்சியில் இருப்பவர்களின் நண்பர்கள் மும்பையை கொள்ளையடிக்கிறார்கள். ஊழல்வாதிகள், துரோகிகள், கொடுங்கோலர்கள்தான் தற்போது இருக்கும் பாஜக கூட்டணி ஆட்சியில் பாதுகாப்பாக இருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி மும்பையின் வளர்ச்சியை அதிகரிக்க நிதி ஆயோக் மும்பை மெட்ரோபாலிடன் பிராந்தியத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மும்பையை மகாராஷ்டிராவில் இருந்து பிரிக்க சதி நடக்கிறது. மகாராஷ்டிராவில் உள்ள 90 ஆயிரம் வாக்குச்சாவடிகளையும் கண்காணிக்க குஜராத்தில் இருந்து பாஜக ஆட்களை கொண்டு வந்திருப்பதாக பாஜக தலைவர்களில் ஒருவரான பங்கஜா முண்டே தெரிவித்துள்ளார். நாளை அவர்கள் மும்பை மற்றும் மகாராஷ்டிராவை பிடுங்க திட்டமிடலாம்.
அம்பேத்கருக்கு பிரதமர் மோடிதான் பாரத் ரத்னா விருது கொடுத்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சொல்கிறார். நாளை ராவணன், கான்சா, அப்சல் கான் ஆகியோரையும் பிரதமர் மோடிதான் கொன்றதாக கூட சொல்வார்" என்றார்.
மகாராஷ்டிராவில் சிவ சேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியாக போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.