சென்னையில் மாநகரப் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதையும் , மாநகரப் பேருந்துகள் நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்கவும் பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்றுவது குறித்து ஆய்வு மெற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிக்னல் மற்றும் மேம்பாலங்கள் சாலையுடன் இணையும் இடங்களின் அருகேயுள்ள நிறுத்தங்களில் பேருந்துகள் நின்று செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க ஆய்வு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்னலில் பச்சை நிறம் ஒளிரும்போதும் சிக்னல் அருகேயுள்ள நிறுத்ததில் பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் வரிசைகட்டி நிற்கும்போது , பேருந்துகளின் பின்பக்கம் நிற்கும் வாகனங்கள் முன்னோக்கி செல்ல முடியாமல் பேருந்துகள் புறப்படுவதை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை உருவாகிறது.
பேருந்துகள் புறப்படத் தயாராகும்போது சிவப்பு நிறம் ஒளிரத் தொடங்குவதால் கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்னலில் காத்திருக்கும் நேரம் அதிகரித்து , போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, சிக்னல், மேம்பாலங்கள் ஆகியவற்றுக்கு 100 மீட்டர் முன்பாகவோ, பின்பாகவோ மட்டுமே பேருந்து நிறுத்தங்கள் இருக்கும் வகையில் மாற்றங்களை மேற்கொள்வது ஆலோசக்கப்படுகிறது என்றும், சென்னையின் பல இடங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்து நிறுத்தங்கள் இடம் மாற்றப்படாமல் உள்ளன என்றும் மாநகர் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்றுவது குறித்து முதல் கட்டமாக பாரிமுனை - முகப்பேர் (7M bus route), வடபழனி - தரமணி (5T bus route) வழித்தடங்களில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், விரைவில் சென்னையின் அனைத்து வழித்தடங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.