தமிழ்நாடு

”வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மின்துறை தயார்” : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!

24X7 மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான "மின்னகத்தில்" அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.

”வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மின்துறை தயார்” : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 24X7 இயங்கி வரும் மின் நுகர்வோர் சேவை மையமான ’மின்னகம்’ செயல்பட்டு வருகிறது.

இந்த மின்னகத்தில், பொதுமக்களிடமிருந்து புகார்களை பெறுவதற்காக, 3 முறைப்பணிகளில், ஒவ்வொரு முறைப்பணிக்கும் 2 மேற்பார்வையாளர்கள் உட்பட 65 பணியாளர்களை கொண்டும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் இயங்கி வரும் 44 மின் பகிர்மான வட்டங்களிலும் நாள் ஒன்றிற்கு நான்கு பேர் வீதம் 176 நபர்களை கொண்டும் 24x7 மணி நேரமும் இயங்கி வருகிறது.

மின்னகம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை பெறப்பட்டுள்ள 28,69,876 புகார்களில் 28,64,215 புகார்கள் (99.80%) மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்னகத்தில், மின் தடை குறித்து பெறப்படும் ஒவ்வொரு புகாரும் உடனடியாக சரி செய்யப்பட்டு, புகார் குறித்த உண்மை தன்மை சம்பந்தப்பட்ட புகார்தாரரிடம் அலைப்பேசி மூலம் உறுதி செய்யப்பட்ட பின்னரே புகார்கள் முடிக்கப்படுகின்றன.

இந்நிலையில் இன்று மின்னகத்தில் பதிவான மின்சாரம் தொடர்பான பொது மக்களின் புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, தொடர்ச்சியாக மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனுக்குடன் சரி செய்யுமாறும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

மாநிலத்தின் மின்சாரத் தேவை மற்றும் மின் விநியோகத்தில் எவ்வித இடைவெளியும் இல்லை. மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எடுத்துள்ளது.

மின் விநியோகம் சார்ந்த குறைபாடுகளை சரிசெய்ய 24 மணி நேரமும் செயல்படும் தொலைபேசி சேவை மின்னகத்தை 9498794987 ல் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

banner

Related Stories

Related Stories