தமிழ்நாடு

”திமுக என்ற மூன்றெழுத்தில்..” : பவள விழா கூட்டத்தில் எழுச்சி மிகு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தி.மு.க என்ற மூன்றெழுத்தில் தான் நம் மூச்சும், பேச்சும், உயிரும், உணர்வும் அடங்கியிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”திமுக என்ற மூன்றெழுத்தில்..” :  பவள விழா கூட்டத்தில் எழுச்சி மிகு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க பவள விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் தி.மு.க கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற பவள விழா பொதுக்கூட்டம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில் கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திராவிட கழகத் தலைவர் ஆசிரியர். கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்கு நாடு தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார்,

தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சி தலைவர் பொன்.குமார், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மக்கள் விடுதலை கட்சி தலைவர் முருகவேல்ராஜன், மனிய நேய ஜனநாயக்கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ், ஆதித்தமிழர் பேரவை கட்சி தலைவர் அதியமான், தமிழ்மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், பார்வார்டு பிளாக் கட்சி நிறுவன தலைவர் பி.என்.அம்மாவாசி ஆகியோர் வாழ்த்துறை வழங்கினர்.

பின்னர் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தலைவர்கள் ஒன்றாதல் கண்டே! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே.

”திமுக என்ற மூன்றெழுத்தில்..” :  பவள விழா கூட்டத்தில் எழுச்சி மிகு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

1949 ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா, அவருடைய தம்பிமார்களுடன் இணைந்து, தி.மு.க.வை தொடங்கிய போது வான் மழை பொழிந்தது. அவ்வாறு வான் மழை வாழ்த்துடன் தொடங்கிய தி.மு.க, இன்று வையகம் வாழ்த்தும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது.

தி.மு.க பவளவிழா கூட்டத்தில் வாழ்த்து வழங்கிய கூட்டணி கட்சித் தலைவர்களால் நாங்கள் பெருமை அடைகிறோம். எங்களுக்கு வரும் வாழ்த்தில் உங்களுக்கும் பங்கு உண்டு. நாங்கள் படைத்த சாதனைக்கு நீங்கள் உறுதுணையாக இருந்துள்ளீர். இந்த அரசுக்கு கிடைத்த புகழ்மாலையில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு இருக்கிறது.

தமிழ்நாட்டில் உருவான தி.மு.க தலைமையிலான கூட்டணியை பார்த்துதான் அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது. நமது கூட்டணி தேர்தல் நேரத்தில் தேர்தலுக்காக உருவான கூட்டணி அல்ல; கொள்கைக்காக உருவான கூட்டணி. இந்திய கூட்டணியின் ஒற்றுமையை சீர்குலைக்க சிலர் நினைக்கிறார்கள்.பா.ஜ.கவின் பகல் கனவு எப்போதும் பலிக்காது.

கழகத்தின் வெற்றியால் தமிழ்நாட்டை வளர்த்தார் பேரறிஞர் அண்ணா. அவரின் இதயத்தை இரவலாகப் பெற்ற முத்தமிழறிஞர் கலைஞர். அரை நூற்றாண்டு காலம் தி.மு.க.வையும், அதன் வழி தமிழ்நாட்டையும் வளர்த்தார். முத்தமிழறிஞர் கலைஞர் பாதையிலிருந்து இம்மி அளவும் மாறாமல், நாம் இப்போது செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

ஒன்றிய பா.ஜ.க அரசு மாநிலங்களை யூனியன் பிரதேசமாக மாற்ற முயற்சிக்கிறது. மாநிலங்களை ஒடுக்கி ஒற்றைத் தன்மையுடைய ஆட்சியை கொண்டுவர ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை பா.ஜ.க அரசு கொண்டு வரப்பார்க்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories