தமிழ்நாடு

அணுகுமுறையை ஆளுநர் திருத்திக் கொள்ளாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் : திமுக மாணவர் அணி எச்சரிக்கை!

ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தி.மு.க மாணவர் அணி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அணுகுமுறையை ஆளுநர் திருத்திக் கொள்ளாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் : திமுக மாணவர் அணி எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க மாணவர் அணியின் மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மத - சாதிய வெறுப்புணர்வை மாணவர்களிடம் விதைக்க வேண்டாம் என தி.மு.க மாணவர் அணி கூட்டத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேபோல்,தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தை விமர்சித்துள்ள ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சுக்கு கண்டனம் தெரிவிததும், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை தடுக்கும் நோக்கத்தோடு தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுக்கும் ஒன்றிய பா.ஜ.க. கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தீர்மானங்கள்:

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை தடுக்கும் நோக்கத்தோடு தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு கண்டனங்கள்!

இந்திய அளவில் கல்வித் துறையில் பல்வேறு குறியீடுகளில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கி கொண்டிருப்பதை நாடறியும். கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திற்கு உரிமை உடையதாய் மாற்றும் மாபெரும் கல்வி புரட்சியை ஏற்படுதியது நீதிகட்சி ஆட்சி காலம். அதனை தொடர்ந்து வந்த சில ஆட்சியாளர்கள் பல்லாயிரகணக்கான பள்ளிகளை மூடிய கொடுங்கோன்மை நடந்தேறியது. பின்னர் ஆட்சி பொறுப்பிற்கு வந்த பெருந்தலைவர் காமராசர் மூடப்பட்ட பல்லாயிரகணக்கான தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறந்து ஏழை எளியோருக்கும் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் உள்ளோருக்கும் தொடக்கக் கல்வி கிடைக்க செய்யப்பட்டது. இருப்பினும், இந்தி திணிப்பின் இறுக்கங்கள் இருந்து கொண்டே இருந்தது.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்த பின், தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழி கொள்கை தான் இருக்கும் என்று சட்டமாக்கினார். தமிழ் மொழி கல்வி மேலோங்கியது. உலக கல்வி ஆங்கில வழியில் பெற முடிந்தது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின் கொண்டு வந்த பல்வேறு சீர்திருத்தங்கள் தொடக்க பள்ளியில் இருந்து உயர்நிலை, மேல்நிலை பள்ளி என்று கல்வியின் தரம் தமிழ்நாடு முழுவதும் பரவியது. பள்ளி படிப்போடு நின்று விடாமல், உயர்கல்வி பெற வேண்டுமென்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் நிறுவபபட்ட கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் ஏராளம்! ஏராளம்!

குறிப்பாக ஒரு மாநிலத்திலுள்ள மாணவர்கள் அனைவரும் பயிலக்கூடிய வகையில், ஒரே சீரான, சமநிலை, சமவாய்ப்பு கொண்டதாய் விளங்கிட சமச்சீர் கல்வியை கொண்டு வந்தார். 1996-ஆம் ஆண்டே பள்ளிகளில் கணினியை அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் – கழகத் தலைவர் அவர்களின் நல்லாட்சியின் மூலம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், உயர்கல்வி பயில புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், பள்ளி பயிலும் மழலையருக்கு காலை சிற்றுண்டி எனவும், கிராமப்புறத்தில் ஏழை, எளியோர் பயிலும் அரசுப் பள்ளியில் உலகத்தரம் வாய்ந்த ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள், மாணவர் திறன் வளர்க்கும், வினாடிவினா, கலைத்திருவிழா, முதலமைச்சரின் விளையாட்டு போட்டி, இந்திய அளவிலான சுற்றுலா, வெளிநாட்டு சுற்றுலா என தமிழ்நாட்டு பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வியை இந்திய அளவில் அல்லாமல் உலக அளவில் உயர்த்தி பிடிக்கும் மண்ணாக தமிழ்நாடு விளங்குகிறது.

இந்நிலையில், ஒன்றிய பா.ஜ.க. அரசால் கொண்டு வரப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020 என்பது, சமூகநீதி-சமத்துவம்-சமவாய்ப்புக்கு எதிரானதாகவும், அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கக்கூடிய மாநில அரசின் உரிமைகளுக்கும், தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கும் எதிரானது. அறிவியல் பூர்வமான கல்வி முறைக்கு மாறாக பழைமைவாதத்திற்கு உரியதாக உள்ளது.

மூன்று-ஐந்து-எட்டு ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கொண்டுவந்து, மாணவர்கள் பள்ளி படிப்பை நிறைவு செய்ய முடியாத வகையில் இடைநிற்றலை உருவாக்கி அனைவருக்கும் கல்வி வழங்கும் வாய்ப்பை சிதைக்கும் வகையில் உள்ளது போன்ற பலவேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்த்து வருகிறார். மேலும் மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் பல்கலைக்கழகங்களின் உரிமைகளை சிதைத்து விட்டு, அனைத்து உயர்கல்வி நிலையங்களுக்கும் இந்திய அளவில் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கும் முறைகளை கொண்டுள்ள தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாது என்றும், தமிழ்நாட்டிற்கென தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒன்றிய பா.ஜ.க. அரசு தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாத காரணத்தால், ஒன்றிய அரசின் ‘சமக்ர சிக்ஷா அபியான்’ (எஸ்எஸ்ஏ) திட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டிய நிதியை விடுவிக்க மறுக்கிறது. அரசமைப்பு சட்டத்திற்கு முரணாகவும், மாநில உரிமைகளுக்கு எதிராகவும் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, இந்தியாவின் கல்வித் துறையில் முதல் மாநிலமாய் விளங்கும் தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை சிதைக்க வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு கல்வித் துறையில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முன்னோடி திட்டங்களை முடக்கி விட வேண்டுமென்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி நோக்கத்தில் நியாயமாக வழங்க வேண்டிய நிதியை தர மறுக்கும் பா.ஜ.க. அரசின் இச்செயல்பாடு மிக கண்டனத்திற்குரியது.எனவே, மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசிற்கு வழங்க வேண்டிய நிதியை விரைவாக வழங்கிட இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தை விமர்சித்துள்ள ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சுக்கு கண்டனம்!

சனாதனத்தை உயர்த்தி பிடித்துக் கொண்டு, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவர் வாக்கிற்கு எதிராக அனைத்து செயல்களையும் செய்துக் கொண்டு, வள்ளுவருக்கு காவிச் சாயம் பூசியும், உலகில் அனைவரும் சமம் என்று சொன்ன வள்ளலார் சனாதனவாதி என்று புதிய கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு, அனைத்து பல்கலைக்கழகங்களையும் அதன் துணை வேந்தர்களை கொண்டு முடக்கி வைத்து, கல்லூரிகளில் சமத்துவ, சமூகநீதி, தமிழ் உணர்வு இவற்றிற்கெல்லாம் எதிரான செயல்களை ஊக்குவிக்கக்கூடிய வகையில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஆளுநர் சமீபத்தில், தமிழ்நாட்டிலுள்ள கல்வி முறை தரமற்றது என்று விமர்ச்சித்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. அவருடைய அபத்தமான பேச்சுகள் மாநில அரசிற்கு எதிராகவும், திராவிட இயக்க சிந்தனைக்கு எதிராகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் உள்ளது.

சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் மனுதர்ம சாஸ்திரத்தை விவரிக்கும் கருத்துப்படங்களும், அறிவியலுக்கு மாறான புராண இதிகாச கருத்துகளை உள்ளடக்கிய பாடங்களும் இருப்பதை நாடே அறியும். இந்திய விடுதலை போராட்டக் களத்தில் தமிழர்களின் பங்களிப்பை கூட மறைக்கும் பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.சி. கொண்டிருக்கும் நிலையில், அறிவியல் பூர்வமாகவும், தமிழர்களின் பண்பாடு மற்றும் தொன்மைகளை முழுக்கச் சொல்லியும், தமிழ்நாட்டில் குறிப்பாக தென்னகத்தில் ஏற்பட்ட சமூக விடுதலை போராட்டத்தின் வரலாறுகளையும் அவசியம் அறிந்து பாடத்திட்டத்தில் கொண்டுள்ளது தமிழ்நாடு அரசின் பாடத்திட்டம். அறிவியல் பூர்வமான அத்தனை முன்னெடுப்புகளையும், உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சியினை விரைவாக பாடத்திட்டத்தில் கொண்டு வந்து சேர்த்ததும் தமிழ்நாடு அரசு என்பதை மறுக்க முடியாது.

தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ட பட்டதாரிகளும், பொறியியல் பட்டதாரிகளும் இன்று உலகின் தலைசிறந்த பொறியாளர்களாக, விஞ்ஞானிகளாக விளங்குவதே இதற்கு சான்றாகும். இஸ்ரோ என்று அழைக்கப்படுகிற இந்திய விண்வெளி ஆராய்சி நிலையத்தின் மிகப்பெரிய தலைமை பொறுப்பை வகித்தவர்கள் எல்லாம் தமிழர் என்பதும், அவர்கள் அரசுப் பள்ளியில் பயின்றவர்கள் என்பது கூடுதல் சான்றாகும். உலகின் தலைசிறந்த மருத்துவர்கள பயின்றது நமது தமிழ்நாட்டின் பாடத்திட்டங்களில் தான். இந்நிலையில், தமிழ்நாடு அரசின் பாடத்திட்டம் மேம்படுத்தப்பட வேண்டும், அது தரம் குறைவாக உள்ளது என்று விமர்சிக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ். பயிற்சியாளரைப் போன்று செயல்படும் ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சுகளுக்கு தி.மு.க. மாணவர் அணி கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறது. அவரது இந்த அணுகுமுறையை திருத்திக் கொள்ளாமல் இருப்பாரேயானால், கழகத் தலைவரின் அனுமதிப் பெற்று விரைவில் தி.மு.க. மாணவர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை முன்னெடுக்கும் என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories