முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சட்டமன்ற நாயகர் கலைஞர் என்கிற மாநில அளவிலான கருத்தரங்கம் சென்னை மயிலாப்பூர் சாந்தோம் ரோஸரி பள்ளியில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்துகொண்டு தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர் பிச்சாண்டி, அமைச்சர் சேகர் பாபு ,தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் , மயிலாப்பூர் எம்எல்ஏ மயிலை த.வேலு உடனிருந்தனர்.
அப்போது விழாவில் உரையாற்றிய அப்பாவு, "புதிய கல்வி கொள்கை தமிழ் சமுதாயத்தை, தமிழ் கல்வியை குழி தோண்டி புதைத்துவிடும் என்றும், எனவே புதிய கல்வி கொள்கை வேண்டாம் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து சட்டபேரவை தலைவர் அப்பாவு மேடையில் பேசியதாவது, "இந்தியாவில் கல்வியில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடுதான். 99% மாணவர்கள் 8 ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் மட்டும் தான் படிக்கிறார்கள். இந்தியாவில் 89 சதவீத மாணவர்கள் மேல்நிலை படிப்பை படிக்கிறார்கள். கல்வியில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
தமிழ்நாடு அரசு கல்விக்கு தான் நிதி அதிகமாக வழங்குகிறது. சமக்ரா சிக்ஷா அபியான் திட்ட நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுக்கிறது. தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட்டால் தான் நிதி வழங்குவோம் என ஒன்றிய அரசு சொல்வது நியாயமா? 5 ஆம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி அடையவில்லை என்றால், உன் தந்தை செய்யும் தொழிலுக்கு நீ சென்றுவிடு என சொல்லும் குலக்கல்வி திட்டத்தை தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கிறார்.
புதிய கல்வி கொள்கையில் 20 ஆயிரம் பேர் பேசுகின்ற சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்கு என்று சொல்கிறார்கள். இதனை முதலமைச்சர் எதிர்க்கிறார். கல்வியில் சிறந்த கட்டமைப்பை தமிழ்நாடு கொண்டுள்ளது. தன்னாட்சி பெற்ற கல்லூரிகளில் படித்தவர்கள் உலக அளவில் சிறந்து விளங்குகிறார்கள். தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் இருக்கக் கூடாது என்று புதிய கல்வி கொள்கை சொல்கிறது இது நியாயமா?
தமிழ்நாட்டில் 70 சதவீத மகளிர் பட்டம் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாடு கல்வியை தான் மாடலாக எடுத்துகொள்ள வேண்டும். எங்களுக்கு புதிய கல்விக் கொள்கையில் இருக்கிற தேர்வு முறை வேண்டாம். தமிழ் சமுதாயத்தை,தமிழ் கல்வியை குழி தோண்டி புதைத்து விடும். எனவே தான் இந்த கொள்கையில் இருந்து தமிழக அரசு உறுதியாக மாறுபட்டு இருக்கிறோம். இந்த கொள்கை வேண்டாம் என்பதற்கு இது தான் முக்கிய காரணம் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை." என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தமிழ்நாடு அரசின் முதல் பணியே கல்வி தான். இந்தியாவில் கல்வியில் வளர்ந்த மாநிலமாக நமது மாநிலம் திகழ்கிறது. கல்வி கட்டமைப்பிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. சமிக்ரா அபியான் திட்டத்தின் மூலம் 2018 ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசு நிதி வழங்கி வருகிறது. புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதி வழங்குவோம் என்று சொல்வது தவறு. நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும், அது மக்களின் வரிப் பணம்.
5 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடையவில்லை என்றால் குலக் கல்விக்கு செல்ல வேண்டும், சமஸ்கிருதம் படிக்க வேண்டும், தன்னாட்சி அங்கீகாரம் ரத்து உள்ளிட்டவற்றை புதிய கல்வி கொள்கையில் இருப்பதால் புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. புதிய கல்வி கொள்கை தமிழ் சமுதாயத்தை, தமிழ் கல்வியை குழி தோண்டி புதைத்துவிடும். புதிய கல்வி கொள்கை வேண்டாம் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது
20 சதவீதம் வரி ஒன்றிய அரசுக்கு போதும், மாநிலங்களுக்கு 80 சதவீதம் ஜி எஸ் டி வரி கொடுக்கப்பட வேண்டும். நீதி\மன்றம் சிறப்பாக செய்யல்பட்டு வருகிறது. வெள்ளை அறிக்கை விட வேண்டும் என எதிர்கட்சிகள் சொல்வது அவர்களது இருப்பை கட்டிக்கொள்ளவே. இதற்கு முன்பு முதல்வர் மேற்கொண்ட வெளிநாடு பயணங்கள் மூலம் பெறப்பட்ட முதலீடு மற்றும் தொழில்கள் மூலம் 18 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகி உள்ளது.
அனைவருக்கும் கல்வி தமிழகத்தில் வழங்கப்படுகிறது...அதை கெடுக்கும் விதமாக புதிய கல்விக் கொள்கை உள்ளது. வாங்கிய கடனுக்கு வட்டி மட்டும் 19 சதவீதம் கட்டப்படுகிறது. அதே நேரம் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு 14 லட்சம் கோடி ரூபாய் கடனை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்துள்ளது. 100 மடங்கு சொத்து வைத்துள்ளவர்களுக்கு இந்த தள்ளுபடி தேவையா?
பணக்காரர்களுக்கு கடனை தள்ளுபடி செய்யும் அரசு, ஏழை மாணவர்களுக்கு கல்வி கடன் கொடுப்பதில்லை. 11 ஆயிரம் கோடி கல்வி கடனை ஒன்றிய அரசு ஏன் தள்ளுபடி செய்வதில்லை? 14 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ள விவரங்களை ஓர் நாள் நீதி மன்றம் கேட்கும். யார் யாருக்கெல்லாம் தள்ளுபடி செய்துள்ளார்கள் என்பதை விசாரிக்கும். நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் எழுத வேண்டும்." என்றார்.